இலக்கியம்

வாழ்த்துகள் வண்ணதாசன்... கூடவே சாகித்ய அகாடமிக்கும்!

செய்திப்பிரிவு

இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வண்ணதாசனுக்கு அவருடைய ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வண்ணதாசனுக்குச் சொல்வதோடு கூடவே சாகித்ய அகாடமிக்கும் வாழ்த்துச் சொல்லியாக வேண்டும். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்போதே அந்த விருதுகளின் மதிப்பும் உயர்கிறது.

முற்போக்கு இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரனின் புதல்வர் வண்ணதாசன், கல்யாண்ஜி எனும் புனைப்பெயர்களைக் கொண்ட சி. கல்யாணசுந்தரம். தந்தையும் மகனும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது தமிழ் இலக்கியத்தில் அரிதான நிகழ்வுகளுள் ஒன்று. எனினும், வண்ணதாசனின் இலக்கியப் பயணம் தந்தையை அடியொற்றியதல்ல. அது வேறு திசையை அடிப்படையாகக் கொண்டது.

1962-ல் ‘தீபம்’ இதழில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன், சிறுகதை வடிவத்தின் மீது நம்பிக்கையுடன் இயங்கிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர். எல்லா மாற்றங்களையும் தாண்டி தாமிரபரணி ஜீவநதியாக இன்றும் ஓடிக்கொண்டிருப்பதுபோல மானுட அன்பின் வற்றாத ஈரத்தையும் பிரியத்தையும் நேசத்தையும் வண்ணதாசனின் கதைகள் எழுதிச் செல்கின்றன. கல்யாண்ஜி என்ற பெயரில் இவர் எழுதிய கவிதைகளும் முக்கியமான பங்களிப்புகள்.

தமிழின் சமகால முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணதாசனுக்கு சாகித்ய விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். எனினும், சாகித்ய அகாடமியின் பாவப் பரிகார நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ஒட்டுமொத்த பங்களிப்புக்காக வழங்கப்படும் ‘ஞானபீடம்’ போன்றதல்ல சாகித்ய விருது. ஒரு குறிப்பிட்ட புத்தகத்துக்கு அது வெளியான ஐந்தாண்டு காலத்துக்குள் வழங்கப்படுவது. ஒரு எழுத்தாளர் தீவிரமாக இயங்கும் காலத்தில் விருது அவருக்கு அளிக்கப்படுவதற்கும், காலம் கடந்து வழங்கப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னரே கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர் வண்ணதாசன். இந்தத் தாமதமான கவுரவத்தின் மோசமான விளைவுகளில் ஒன்று என்னவென்றால், அன்று வண்ணதாசன் கவுரவிக்கப்பட வேண்டிய வயதில் இன்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் அல்லது வாய்ப்பிழக்க வேண்டும் என்பது.

சாகித்ய விருதுக்கான இந்த ஆண்டின் பரிசீலனைப் பட்டியலில் இருந்ததாகச் சொல்லப்படும் கவிஞர் இன்குலாப், அவர் தீவிரமாக இயங்கிய காலகட்டத்தில் அகாடமியால் புறக் கணிக்கப்பட்டார். கடைசியில் அகாடமி அவரைக் கவுரவிக்க நினைத்த காலத்தில் அவர் இறந்துவிட்டார். காலமானவர் களுக்கு விருது வழங்குவதில்லை எனும் மரபைப் பிற்காலத் தில் வரித்துக்கொண்ட அகாடமி, இனி என்ன செய்யப்போகிறது?

எல்லாவற்றையும் தாண்டியும் வண்ணதாசனுக்கு அளிக்கப் பட்ட விருது உவகை அளிப்பது. ஏனென்றால், சாகித்ய அகாடமி நேர்த் திசையில் நடப்பதை இது உறுதிசெய்திருக்கிறது. நன்னம்பிக்கையை அது வளர்த்தெடுக்கிறது!

SCROLL FOR NEXT