இலக்கியம்

நல் வரவு | அம்மியும் இன்னும் சிலவும்...

மு.மு.கார்த்தி

மயிலை மாடு | மா.நடராசன் | விலை ரூ.80 | என்.சி.பி.எச். வெளியீடு, சென்னை-98 | 044-26241288

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கைப் பாடுகளை அவர்களது பேச்சு மொழியிலேயே இயல்பாகப் பதிவுசெய்துள்ள 11 சிறுகதைகளின் தொகுப்பிது. விவசாயத்தோடு இரண்டறக் கலந்த மனிதர்கள் நிலத்தோடும், உழவுக்குத் துணை நிற்கும் மாடுகளுடனுமான தங்கள் உறவின் நெருக்கத்தை அசலாய்ப் பேசும் கதைகள் இவை. 45 ஆண்டுகளாகக் கதாசிரியருக்குள் ஊறிக் கிடந்த 'மயிலை மாடு' கதையாய் வெளிப்படும்போது, நமக்குள்ளும் திமிறிக்கொண்டுவருகிறது சக உயிர்களின் மீதான நேசம்.

*

வேலூர் வரலாற்றுச் சிறப்பு | வேலூர் மா.குணசேகரன் | விலை ரூ.250 | பாரதி புக் ஹவுஸ், வேலூர்- 632004 | 9942441751

வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியிடம் வேலை பார்த்த இந்தியச் சிப்பாய்கள் 1857-ல் செய்த புரட்சியை, பலரும் முதல் சுதந்திரப் போர் என்றனர். இது நடைபெறுவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே,1806-ல் வேலூர் கோட்டையில் 'சிப்பாய்ப் புரட்சி' நடைபெற்றது என்பதும் மறைக்க முடியாத முக்கியமான வரலாறாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூரின் வரலாற்றுச் சிறப்புகள், இயற்கை வளம், காந்தியின் வருகை, ஊரின் பெருமைக்குரிய மனிதர்கள் என பலவற்றையும் தேடிக் கண்டெடுத்துத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். பொருத்தமான படங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் சிறந்த ஆவணமாக அமைந்திருக்கும்.

*

அம்மியும் இன்னும் சிலவும்… | மிகையிலான் | விலை: ரூ.100 | வயல் பதிப்பகம், தக்கலை-629175 | 9443450189

நீட்டி முழக்கும் வர்ணனைகள் எதுவுமற்று, தொடங்கிய கணத்திலேயே முடிந்துவிடுபவையாக இந்தத் தொகுப்பின் கதைகள் இருக்கின்றன.

சமகால வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை மிகையிலான் அப்படியே சொல்லியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை, தனியார் கல்வி, விவசாயிகளின் திண்டாட்டம் என்று தன் கதைகளுக்கான வெளியைத் தேர்வுசெய்தவர், கதையைச் சொல்லும் முறையிலும் இனி முன்னேற்றம் காண்பார் என்பதற்கான அச்சாரமே இந்நூல்.

*

பாவேந்தர் வாழ்க்கையிலே… | ந.சண்முகம் | விலை: ரூ.70 | நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை-606601 | 9843823777

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் இந்நூல், அவரது வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளின் சுவாரசியமான தொகுப்பு.

பாரதிதாசன் தனது பள்ளிப் பருவம் தொடங்கி, 70 வயது வரையிலான வாழ்க்கைச் சுருக்கத்தை 'தன் வரலாற்றுப் பாடல்' எனும் தலைப்பில் 1960-ல் எழுதியிருக்கிறார். சிலம்பம், குத்துச் சண்டை ஆகியவற்றை முறையாகப் பயின்றவர் பாரதிதாசன். இதுபோன்று சுவையான செய்திகள் பல இந்நூலின் வழி அறியக் கிடைக்கின்றன.

*

பாட்டி வைத்தியம் | குமுதா சாந்தாராமன் | விலை: ரூ.220 | சரண் புக்ஸ், சென்னை - 600 017. | 97899 13700

நவீன மருந்துகளுக்கு முந்தைய காலத்தில் நமக்குக் கைகொடுத்தது நம் முன்னோர்களின் கைவைத்தியம். வீட்டில் தினந்தோறும் உணவில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கனமான, உடலுக்குச் சிக்கல் இல்லாத எளிய மருத்துவமுறை இது. இந்த எளிய மருத்துவமுறையைத் தாங்கி 'பாட்டி வைத்தியம்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கைவைத்தியங்களுக்கு வழிகாட்டும் இந்த நூல், 'உணவே மருந்து' என்ற உண்மையையும் உணர வைக்கிறது.

SCROLL FOR NEXT