இலக்கியம்

கடவுளின் நாக்கு 19: யானையின் கண்கள்!

திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு காலத்தில் யானைகளுக்குத் தன் பருத்த உடலைப் போலவே பருத்த கண்கள் இருந்தன. தன் விருப்பம் போல சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்தன. ‘நம்மால் ஒரு பிடி கூட சாப்பிட முடிய வில்லை; ஆனால் யானை இவ்வளவு சாப்பிடுகிறதே…’ என்று ஒரு ஆமை பொறாமை கொண்டது.

ஆகவே, ‘யானை மற்றவர்களை விட அதிகம் சாப்பிடுகிறது. இப்படி சாப்பிட்டால் காடே அழிந்துவிடும்’ என்று ஆமை அவதூறு பரப்பத் தொடங்கியது. மற்ற விலங்குகளும் அதை நம்பி கடவுளிடம் சென்று முறையிட்டன.

நீதி விசாரணைக்காக யானையை அழைத்து வரும்படி ஆணையிட்டார் கடவுள். யானையோ கரும்பை ருசித்து தின்றபடி ‘பிறகு வருகிறேன்…’ என்று அலட்சியமாக சொன்னது.

கடவுளுக்கு கோபம் வந்து, யானையின் கண்களை அம்பு எய்தி குருடாக்கிவிட்டார். அத்துடன் ‘உனக்கு பசி தீரவே தீராது’ என்று சாபமும் கொடுத்துவிட்டார். பாவம், யானை. கண்தெரியாமல் பசியோடு அலைந்தது. அப்போது, ஒரு புழு யானைக்கு உதவுவதற்கு முன்வந்தது.

‘‘நண்பா, வேண்டுமானால் ஒரு நாளைக்கு என் கண் களைக் கடனாகத் தருகிறேன். வைத்துக்கொள்’’ என்றது. சந்தோஷத்துடன் யானைபுழுவின் கண்களை ஏற்றுக்கொண் டது. அப்படித்தான் யானைக்கு சிறிய கண்கள் உருவாகின. யானையும் காட்டில் உணவுத் தேடி பசியாற்றிக் கொண்டது.

மறுநாள், தன் கண்களைத் திரும்பக் கேட்க யானையைத் தேடி வந்தது புழு. யானைக்கு அதைத் திருப்பித் தர மனமில்லை. ஆகவே, யானை தன் பலமான காலால் புழுவை நசுக்கிக் கொன்றுவிட்டது.

அன்று முதல் இன்றுவரை புழு தன் கண்களைத் திரும்ப கேட்பதற்காக யானையைப் பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யானையும் அலட்சியமாகத் தன் காலால் புழுவை நசுக்கி கொல்வதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது என்கிறது தாய்லாந்து நாட்டுப்புறக் கதை ஒன்று.

நன்றி மறந்தவர்கள் எப்போதும் குரூரமாகவே நடந்துகொள் வார்கள். கொடுத்த பொருளைத் திரும்பக் கேட்டால் கிடைக்காது என்பதற்கு உதாரணமாக இக்கதையைச் சொல்கிறார்கள்.

யானை தன் பசிக்குச் சாப்பிடுகிறது. ஆனால், அது ஒரு ஆமைக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. உணவு விஷயத்தில் மனிதர்கள் அதிகம் பொறாமை கொள்கிறார்கள். அலுவலகங்களில், உணவகங்களில், விருந்தில் அடுத்தவர் என்ன சாப்பிடுகிறார்கள்? எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என கண்காணிக்காத ஆட்களே இல்லை. ருசித்து அதிகம் சாப்பிடுகிறவர்களைப் பொறாமையோடுதான் பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள். அவமானப்படுத்து கிறார்கள்.

உழைக்கும் மக்கள் சாப்பிடும் அளவுக்கு, உட்கார்ந்து வேலை செய்கிறவர்கள் சாப்பிட முடியாது. அதற்காக, அவர்கள் மீது ஏன் பொறாமை ஏற்பட வேண்டும்? ஏன் அவர்களைக் கீழாக நினைக்க வேண்டும்? உணவு என்பது அவரவர் தேர்வு. யார் எதைச் சாப்பிட வேண்டும் என்று கட்டளையிடுவது அராஜகம்.

ஒருவர் உணவை மற்றவர் பகிர்ந்து கொள் வது இயல்பானது. ரயில் பயணங்களில் அப்படி யாரோ கொடுத்த இட்லியை, எலுமிச்சைச் சோற்றை நான் சாப்பிட்டிருக்கிறேன். இப்போது மறைத்து உட்கார்ந்துகொண்டு, சிறுவர் சிறுமிகள் பார்த்துக்கொண்டிருந்தால் கூட ‘ஒரு வாய் தரட்டும்மா?’ எனக் கேட் காத மனிதர்களைத்தான் பயணங்களில் பார்க்கிறேன். சாப்பாட்டினைக் கையில் கொண்டுபோவதை அசிங்கமாக நினைக்கிறார்கள் பலர். ஒரு பருக்கைக் கூட சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்று வீட்டில் பழக்குவார்கள். இன்று சிந்திச் சிதறிச் சாப்பிட்டு, பாதிக்குமேல் உணவை வீணடிக்கிறார்கள். குப்பையில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். கல்யாண விருந்துகளை நினைத்தால் ஆற்றாமையாக உள்ளது. எவ்வளவு பணம்? எவ்வளவு உணவு வீணடிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிற ஒரு நண்பர் சொன்னார். எங்கள் அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தில் எல்லோரின் உணவையும் ஒரு மேஜையில் வைத்துவிடுவோம்.

எல்லா உணவுகளையும் ஒன்றாக திறந்து வைத்து, யாருக்கு எது பிடிக்கிறதோ, அதை எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதே நடைமுறை. இதனால் இந்திய உணவு, சீன உணவு, இத்தாலிய உணவு, மெக்சிகன் உணவு, அரபு உணவு என பல்வேறு தேசங்களின் உணவை ருசிக்க முடிகிறது. அலுவலகத்தில் பகிர்ந்து உண்பதால் நாங்கள் ஒரு குடும்பம் போலவே உணருகிறோம். நாம் செய்ய வேண்டியது நம் உணவை பொதுவில் வைக்க வேண்டும் என்பது மட்டுமே. யார் எவ்வளவு உணவு கொண்டுவருகிறார்கள்? என்ன கொண்டுவருகிறார்கள் என்பது முக்கியமில்லை. 125 ஊழியர்கள் இருப்பதால் தினமும் குறைந்தது நூறு விதமான உணவு கிடைக்கிறது. உண்மையில் தினமும் விருந்து சாப்பிடுகிறோம்’ என்றார்.

யோசித்துப் பாருங்கள். எவ்வளவு எளிய வழி. ஆனால், ஏன் இதைச் சாத்தியமாக்க நாம் யோசிக்கவே இல்லை. குறைந்தபட்சம் பள்ளிகளில் இதை நடைமுறைப்படுத்தலாமே.

வீட்டில் செய்த எள்ளுருண்டையை டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு100 மைல் பயணம் செய்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொண்டுபோய் கொடுத்து வருகிற மனசு முந்திய தலைமுறைக்கு இருந்தது. இன்றைக்கு கடைகளில் வாங்கிய இனிப்புகளில் மீதமானவற்றைக் கூட எவருக்கும் பகிர்ந்து தர மனமற்றவர்களாக வாழும் மனிதர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

யானையின் பசியை நினைத்து புழு கவலைப்படுகிறது. தன் கண்களைக் கொடுத்து யானைக்கு உதவி செய்ய முன்வருகிறது. எளியவர்களின் இயல்பு இதுவே! ஆனால், கண் கொடுத்த புழுவை தன் கால்களால் நசுக்கிக் கொல்கிறது யானை. பலமானவர்கள் எப்போதும் எளியோர்கள் செய்த உதவியை நினைப்பதே இல்லை.

‘புத்த ஜாதக’க் கதை ஒன்றில் பசியால் வாடும் துறவிக்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்று உணர்ந்த முயல், நெருப்பில் பாய்ந்து தன்னையே உண்ணும்படி தருகிறது. தியாகத்தின் உச்சநிலை இது. ‘பசிப் பிணி போக்குவதே… அறம்’ என்கிறாள் மணிமேகலை. அவள் கையில் உள்ள அமுத சுரபியில் அள்ள அள்ள உணவு வந்துகொண்டே இருக்கிறது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் அமுதசுரபி போல ஒரு பொருள் இடம்பெற்றிருக்குமா எனத் தெரியாது. இந்திய மனதால் மட்டுமே அமுதசுரபியைக் கற்பனை செய்ய முடியும் என்று தோன்றுகிறது. பசியை முற்றிலும் உணர்ந்தவர்கள். பசியாற்றுதலை அறமாக கொண்டவர்கள் இந்தியர்கள்.

‘அன்னதாதா சுகி பவ’

அதாவதும்

‘அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்’

என்கிறது மூதுரை.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி’

- என்கிறது திருக்குறள். அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்ட சிறுத்தொண்டர், சிவனடியார் பசியைப் போக்க பிள்ளைக் கறி சமைத்து தந்த கதையைச் சொல்கிறது பெரிய புராணம். இப்படி பசியாற்றுதலின் ஆயிரம் கதைகள் நம்மிடம் உள்ளன.

இலவசமாக உணவு தரக்கூடிய அறச்சாலைகள் இந்தியா அளவுக்கு வேறு எந்த தேசத்திலும் கிடையாது என்பதே சுற்றியலைந்து நான் கண்ட உண்மை. உணவைப் பகிர்வதே உலகைப் பகிர்வதின் முதற்படி.

இணையவாசல்:தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளை வாசிக்க -http://www.xinxii.com/gratis/118976rd1350284693.pdf

- கதை பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

SCROLL FOR NEXT