‘கொனார்க் போய் வரலாம் என நினைக்கிறோம். உங்கள் ஆலோசனை தேவை’ என்று சொல்லி, ஒரு இளைஞர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘நேரில் சந்திக்கலாம்…’ என வரச் சொல்லியிருந்தேன்.
வந்தவர் தானும் நண்பர்கள் மூவரும் காரில் கொனார்க் போகத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
‘‘மகிழ்ச்சி, என்ன ஆலோசனை தேவை?’’ எனக் கேட்டேன்.
‘‘எங்கே என்ன சாப்பிட கிடைக்கும்? எது நல்ல தங்கும் விடுதி? எந்த ஊரில் விலை மலிவாக கலைப் பொருட்கள் கிடைக்கும்? நாட்டு சாராயம் எங்கே விற்பார்கள்…’’ எனக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.
‘‘நான் டூரிஸ்ட் கைடு இல்லை…’’ என்று சொன்னேன்.
உடனே அவர், ‘‘இதெல்லாம்கூட கூகுள்ல பார்த்துத் தெரிஞ் சிக்கிடலாம். டிராவல்ல நோய் வந்துட்டா என்ன செய்யறது? பணத்தை எப்படி பாதுகாப்பாகக் கொண்டுபோறது? ஆயுதம் ஏதாவது வைத்துக் கொள்ளலாமா? வழிப்பறிக் கொள்ளை நடக்கும் என்கிறார்களே… நிஜமா?” என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.
‘‘இவ்வளவு பயத்துடன் ஏன் பயணம் போகிறீர்கள்?’’ எனக் கேட்டேன்.
‘‘டிராவல்ல எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது’’ என்றார் அந்த இளைஞர்.
‘‘அப்போ பேசாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடங்கள்…’’ என்று சற்றுகோபமாகவே சொன்னேன்.
‘‘நாங்க டூர் போறது ஜாலியா என்ஜாய் பண்ணத்தான்…’’ என்று சொன்னார் அவர்.
‘‘நான் ஜாலிக்காக டூர் போகிறவனில்லை…’’ என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன். அன்று இரவெல்லாம் மனதில் என்னென்னமோ தோன்றியபடியே இருந்தது. ஒரு பயணம் போவதற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? வீட்டை ஏன் முதுகில் தூக்கிக்கொண்டு போக துடிக்கிறார்கள்? சகல வசதிகளுடன் அலுங்காமல் போய் வருவதற்கு பெயர் பயணமா? கொஞ்சம் ரிஸ்க் எடுத்துப் பாருங்களேன். வயது இருபத்தைந்துதானே ஆகிறது!
உலகின் ஏதோவொரு கோடியில் இருந்து 80 வயதில் ஒருவர் கன்னியாகுமரியைப் பார்க்க வந்து நிற்கிறாரே, அந்த வெள்ளைக்காரருக்கு இருக்கும் தைரியம் ஏன் நமக்கு இல்லை? சைக்கிளிலேயே உலகம் சுற்றிவருகிறாரே ஒரு இளைஞர் அவருக்கும் வயது 25-தானே! கண் தெரியாமல் இமயமலை மீது ஏறி சாதனை செய்தவருக்கு இவ்வளவு கேள்விகள்… பயம் இருந்திருக்குமா?
இது இளைஞனின் பிரச்சினை மட்டுமில்லை; நம்மில் பலரும் பயணம் செய்வதற்கு தயங்குகிறோம், பயப்படுகிறோம். ஏதாவது வசதி குறைவாக கிடைத்துவிட்டால் புலம்புகிறோம். மாறுபட்ட அனுபவத்தைத் தருவதே பயணம் என ஒருவருக்கும் புரிவதில்லை.
ஜிப்சிகள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தங்கள் கூடார வண்டிகளில் சுற்றியபடியே உலகை வலம் வருகிறார்கள். இவர்கள் சொத்து சேர்ப்பதிலும், சம்பாதிப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, கலைகளை மட்டுமே பிரதானமாக கருதுகிறார்கள்.
ஜிப்சிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறார்கள். நார்வே , ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் ‘சிக்கொயின’ என்றும், இத்தாலியில் ‘ரோம்’ எனவும், துருக்கியில் ‘சிக்கேனா’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஜிப்சிகள் தங்கள் மொழியை ரோம் ( Rom ) என அழைக்கிறார்கள் .இந்த மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஊர் சுற்றி வாழும் ஜிப்சி இனத்தைப் பெருமளவு அழித்தவர் ஹிட்லர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஜிப்சிகள் நாஜிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜிப்சிகளை அழித்தாலும் அவர்களின் இசை மரபை அழிக்கமுடியவில்லை. இன்றும் வீரியத்துடன் தொடரவே செய்கிறது.
மனிதர்கள் மட்டும் பயணம் செய்வதில்லை. கதைகளும் பயணம் செய்கின்றன. கிரேக்கத்தில் ஈசாப்பால் சொல்லப்பட்ட ‘காகம் நரி’ கதை இந்தியாவுக்குப் பயணம் செய்து வந்திருக்கிறது. இந்தியாவில் சொல்லப்பட்ட குரங்கு முதலை கதை கிரேக்கத்துக்குச் சென்றிருக்கிறது. உலகெங்கும் கதைகள் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களைப் போலவே கதைகளும் தாங்கள் வாழும் இடங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கின்றன.
அரபு வணிகர்கள் உலகம் முழுவதும் சுற்றிப் பயணம் செய்திருக்கிறார்கள். அரபுதேசக் கதையொன்று ‘கடற்பூதம்’ என்ற பயத்தை பற்றிப் பேசுகிறது. அராபிய வணிகன் ஒரு வன் தனது ஆட்களுடன் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அதில் ஒரு இளைஞன் முதன்முறையாக கடலில் பயணம் செய்கிறான். அவன் பயணம் புறப்பட்டதில் இருந்து ‘அய்யோ… நாம் கப்பல் கடலில் மூழ்கிப்போய்விடப் போகிறோம். கடற்பூதம் நம்மைப் பிடித்துக் கொள்ளப்போகிறது. நாம் கடலில் மூழ்கி செத்துப்போய்விடப் போகிறோம்…’ என்று கத்திக்கொண்டே இருந்தான்.
இவனால் கப்பலில் இருந்த மற்றவர்களும் பயப்பட ஆரம்பித்தார்கள்.
‘கப்பல் உறுதியானது. கடற்பூதம் என்று ஒன்றுமே இல்லை. கடலில் எதுவும் நடந்துவிடாது. நீ தேவையில்லாமல் பயப்படாதே…’’ என்று மாலுமி சொன்னபோதும், அவன் கத்துவதை நிறுத்தவே இல்லை.
‘எப்படியும் கடற்பூதம் நம்மைப் பிடிக்கப் போகிறது, நாம் கடலில் மூழ்கிச் சாகப்போகிறோம்’ என்று புலம்பிக் கொண்டேயிருந்தான் அவன். இது பெரிய தொந்தரவாக மாறியது,
‘இவனை எப்படி சமாதானம் செய்வது?’ என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
அப்போது கப்பல் மருத்துவர் ‘இதற்கு ஒரு வைத்தியம் இருக்கிறது…’ என்று மாலுமியிடம் சொன்னார்.
‘‘எதையாவது செய்து அவன் பயத்தைப் போக்குங்கள் என்றார் மாலுமி. உடனே அந்த இளைஞனைத் தூக்கி கடலில் வீசும்படி மருத்துவர் கட்டளையிட்டார்.
மறுநிமிசம் காவல் வீரர்கள் அவனைத் தூக்கி கடலில் போட்டார்கள். அந்த இளைஞன் அலைகளுக்குள் நீந்த முடியாமல் திக்குமுக்காடினான். அவன் கடலினுள் மூழ்கப்போகும் நேரம் காவலாளிகள் குதித்து, அவனை மீட்டு கப்பலுக்குக் கொண்டு வந்தார்கள்
உயிர் பிழைத்தவன் அதன்பிறகு வாயைத் திறக்கவே இல்லை.
மாலுமி ஆச்சர்யமடைந்து , ‘‘இது எப்படி சாத்தியமானது..?’’ என்று கேட்டார்.
அதற்கு அந்த மருத்துவர் ‘‘இந்த இளைஞனுக்கு கடலில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பு என்பதை நன்றாக அறிவான்.
நாம் வரப்போவதைப் பற்றி நினைத்து பயப்படுவதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை, எதையும் தைரியமாக எதிர் கொண்டால் ஆபத்திலும் கூட நாம் வெற்றி பெற முடியும் என்றார்.
என்றோ ஒரு கதையில் அரபு வணிகர்களுக்குச் சொல்லப் பட்ட இந்த வழிகாட்டுதல், இன்றைய தலைமுறைக்கும் பொருந்தக்கூடியதே.
ஜிப்ஸி பாடல்களில் ஒன்று இப்படி தொடங்குகிறது:
‘காற்றை போல நாங்கள் அலைந்து கொண்டேயிருப்போம்
தைரியம்தான் எங்களின் சொத்து
உலகை காதலிப்பவர்களால் ஒருபோதும்
வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கமுடியாது’
எவ்வளவு அற்புதமான வரிகள். நாடோடியின் பாடலுக்கு வயதாவதில்லை. அது சொல்லும் உண்மையே பயணத்தின் முதல் பாடமாகும்!
இணையவாசல்: >ஜிப்சிகளின் கதைகளை அறிந்துகொள்ள
- கதைகள் பேசும்.... | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com