குடியுரிமைச் சட்டத்தின் விளைவு: இந்தியாவில் பெரும் போராட்டம் வெடிப்பதற்குக் காரணமான குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைச் சாரமாக எடுத்துக்கொண்ட நாவல் இது. எழுத்தாளர் அ.கரீம், இதற்காக ஒரு கற்பனையான உலகத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என இந்த உலகத்துக்குள் கரீம் உருவாக்கிக் காட்டியிருக்கிறார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுலைமானின் கொள்ளுப் பேத்தி மைமூன். அப்பா இறந்ததால் மதரசா பள்ளியின் ஆதரவுடன் வளர்க்கப்பட்ட இவளை, இப்ராகிம் விரும்பி மணந்துகொள்கிறான்.
உறவினருக்குத் தத்து கொடுக்கப்பட்டு பட்டப்படிப்பு முடித்தவள் ஷாகிரா. அவளுக்கு ஊரே வியக்கத் திருமணமும் நடக்கிறது. குடியுரிமைச் சட்ட மசோதா இவர்களின் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்கிறது. ஷாகிரா, பச்சிளம் குழந்தையுடன் முகாமில் அடைக்கப்படுகிறாள். குழந்தையை வீட்டுக்குக் கொண்டுவர கணவர் வைத்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. மைமூனும் ஷாகிராவும் முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும்தான் மையக் கதாபாத்திரங்கள். இந்தப் பின்னணியில் இந்தச் சட்டம் ஏற்படுத்தும் பாதிப்பை கரீம் சித்தரித்துள்ளார். - குமரன்
முகாம்
அ.கரீம்
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9942511302
பெரியபுராண ஆய்வு நூல்: பெரியபுராணத்தை எவ்வாறு களப் பணிகளின் அடிப்படையில் சேக்கிழார் இயற்றினார் என்பதை ஆராய்ச்சிபூர்வமாக நிறுவும் நூல் இது. சேக்கிழாரின் வரலாற்றையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் தரவுகளின் அடிப்படையில் நூலாசிரியர் இராசமாணிக்கனார் விளக்குகிறார்.
சேக்கிழாரின் சொந்த ஊர் குன்றத்தூர் என்பதற்கு அங்கு இன்றும் இருக்கும் சேக்கிழார் கோயிலைச் சான்றாகக் காட்டுகிறார். சேக்கிழாரின் தம்பி பாலறாவாயர் பெயரில் குளம் இருப்பதையும் கூடுதல் சான்றாகக் காட்டுகிறார். சேக்கிழாரின் பெரியபுராணத் தகவல்களை கல்வெட்டுச் சான்றுகளுடன் ஒப்பிட்டு நிறுவுகிறார். தமிழ் அறிஞரான இராசமாணிக்கனாரின் இந்த ஆராய்ச்சிப் பணி போற்றுதலுக்கு உரியது. - விபின்
பெரியபுராண ஆராய்ச்சி
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
பூம்புகார் பதிப்பகம், சென்னை
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044 25267543