இலக்கியம்

சிறுகதைக்கு நூற்றாண்டு விழா

செய்திப்பிரிவு

குளத்தங்கரை அரச மரம் என்னும் தமிழின் முதல் சிறுகதையை வ.வே.சு. ஐயர் 1915-ல் எழுதினார். அதற்கு முன்னரே பாரதியார் முதல் சிறுகதையை எழுதிவிட்டார் என்று கூறுவோரும் உண்டு. அந்த வகையில் தமிழ்ச் சிறுகதைக்கான நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருச்சியில் டிசம்பர் 17 அன்று நிகழ்த்துகிறது.

வ.வே.சு. ஐயர் திருச்சியில் பிறந்தவர். தமிழுக்கு முதல் ஞானபீடம் பெற்றுத்தந்த அகிலன் திருச்சி மாவட்டத்தில் பிறந்து ரயில்வே சர்வீஸில் பணிபுரிந்தார். வெகுஜன உலகின் இலக்கிய சிகாமணி கல்கி கிருஷ்ணமூர்த்தி திருச்சி இஆர்ஐ பள்ளியில்தான் படித்தார். கள ஆய்வுப் படைப்பாளியான ராஜம் கிருஷ்ணன் திருச்சி முசிறியைச் சேர்ந்தவர்தான். பெண்களின் உள்ளம் கவர்ந்த நாவலாசிரியர் லக்ஷ்மி திருச்சி தொட்டியத்துக்காரர். இப்படி அமரத்துவ எழுத்தாளர்கள் பலரும் திருச்சியிலிருந்து முகிழ்த்துள்ளார்கள். ஆகவே, அதிகமான இலக்கிய மேதைகளைத் தந்த திருச்சியில் தமிழ்ச் சிறுகதைக்கான நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் தமுஎகச தோழர்கள்.

‘இலக்கியம் படி இதயம் விரியும்!’ என்ற கோஷத்துடன் இளைய தலைமுறைகளை இலக்கியத் தளத்துக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த விழாவை நடத்த முனைந்திருக்கிறோம். அதற்கேற்பவே திட்டமிட்டிருக்கிறோம்!’ என்று சொல்கிறார் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பட்டிமன்றப் பேச்சாளரான கவிஞர் நந்தலாலா.

‘இன்றைக்கு வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல் போன்ற தளங்களில் எழுதுபவர்களுக்கு இலக்கிய உலகு ஆழ்ந்த புரிதல் உள்ளது; சமூக அறிவு விஸ்தரிக்க வல்லது என்பதை அறிவிக்க வேண்டியிருக்கிறது!’ என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இதற்காக 10-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை சிறுகதை மற்றும் ஒரு பக்க சிறுகதைப் போட்டிகளும், குறும்பட போட்டிகளையும் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 படைப்புகளுக்கும் பரிசு அளிக்கப்படுகிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் உள்ளது.

பார்த்தீபராஜா மாற்று நாடக இயக்கம் மூலம் சில அமரத்துவ சிறுகதைகளை நாடகமாக்கி காட்டுகிறார். திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அடித்தட்டு மக்கள் மீதான அன்பு செய்யும் படைப்புகளை சினிமாவுக்குள் கொண்டுவரும் வித்தை குறித்து விளக்குகிறார். மகசசே விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா மேடையில் பாராட்டு பெறுகிறார். வேல.ராமமூர்த்தி, பவா. செல்லத்துரை கதை சொல்லி நிகழ்வு மூலம் பல கதைகளை எடுத்தாள உள்ளார்கள்.

தமுஎகச நடத்தும் இந்த விழாவை செளடாம்பிகை கல்விக் குழுவோடு தி இந்துவும் இணைந்து கொண்டாடுகிறது.

SCROLL FOR NEXT