இலக்கியம்

‘யூடியூப்’ புத்தக விமர்சகர்!

க.சே.ரமணி பிரபா தேவி

புத்தகங்களைப் பற்றிய அறிமுகங்கள் நண்பர்கள் வழியாகவும், புத்தகக் காட்சிகள் வழியாகவும், எழுத்தாளர்களின் விமர்சனங்கள் வழியாகவும் வந்த காலகட்டத்தைத் தாண்டி மின் ஊடகங்கள் வழியாக நிகழத் தொடங்கியிருக்கியிருக்கும் காலம் இது.

அதன் நீட்சியாக, தமிழ் நாவல்கள், மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், சிறுகதைகள் போன்றவற்றை ‘யூடியூப்’ வீடியோக்கள் மூலம் அறிமுகம் செய்துவருகிறார் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட கார்த்திக் கோபாலகிருஷ்ணன். சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவரும் அவருக்கு எப்படி இந்த எண்ணம் எழுந்தது? அவரே சொல்கிறார்:

“இனிவரும் காலத்தில் முக்கியமான ஊடகமாகத் திகழப்போவது இணையமெனத் தோன்றியது. எத்தனையோ பேர் திரைப்படங்களைக் காணொலியில் விமர்சனம் செய்யும்போது, நாம் ஏன் புத்தகங்களை அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. திரைப்படங்கள், தொலைக்காட்சிகளைப் பார்ப்பது போல, வாசிப்பதும் இயல்பான விஷயமாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். புத்தக விமர்சனத்தை ஆரம்பித்தேன்” என்கிறார்.

இதுவரை 40 புத்தகங்களை விமர்சனம் செய்துள்ளார் கார்த்திக். இதில் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’, டால்ஸ்டாயின் குறுநாவல், ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’, எலிஸ் பிளாக்வெல் ‘பசி’ உள்ளிட்ட நூல்கள் ஆத்மார்த்தமானவை என்கிறார். தமிழில் பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’, காசியபனின் ‘அசடு’, அ. முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’ ஆகியவை குறித்த விமர்சனங்களும் கார்த்திக்கின் பார்வையில் வெளியாகியிருக்கின்றன.

மானுடத்தையும் உலகத்தையும் பற்றியதனது பார்வை வாசிப்பால் மாறி, சமூகப் பொறுப்பு கூடியிருப்பதாய்ச் சொல்கிறார் ‘யூடியூப்’ புத்தக விமர்சகர் கார்த்திக்.

- க. சே. ரமணி பிரபா தேவி.

SCROLL FOR NEXT