இலக்கியம்

இணையத்தின் பகாசுர வாய்க்கு எழுத்தாளர்களும் தலை கொடுக்கலாமா?

செய்திப்பிரிவு

இணையத்தின் வருகையும் அதன் உபவிளைவுகளான சமூக வலைதளங்களும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதிலும் பெரிய ஊடகங்களிடமிருந்து விலகி சிற்றிதழ்கள், சில நூறு வாசகர்கள் என்ற வரம்புக்குள் இருந்த தீவிர இலக்கியவாதிகளை உலகெங்கும் கொண்டுசென்றது இணையம். ஆனால், இணையம் பரவலாக்கிய துரித சிந்தனைக் கலாச்சாரத்துக்கு, ஏனைய தரப்பினரைப் போல எழுத்தாளர்களும் வெகுசீக்கிரம் இரையாகிவருவது மோசமான அறிகுறி.

இணைய உலகம் தரும் உடனடி வெளியீடு என்ற அனுகூலத்தால், ஒரு செய்தி வெளியானவுடனேயே அதன் உண்மைத் தன்மை, முழுமையான பின்னணி எதையும் தெரிந்துகொள்வதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவிக்கும் கலாச்சாரம் ஒரு வியாதியாகவே மாறிவிட்டது. கவன ஈர்ப்புக்காக சாமர்த்தியமான ஓரிரு வரிகளில் உடனடித் தீர்ப்புகள் வழங்கும் கலாச்சாரத்துக்கு ஆட்படுவது சாமானியர்கள் சிக்கும் வலை. காலத்தை விஞ்சும் படைப்புகள் மூலம் வரலாற்றில் நிற்க முற்படும் எழுத்தாளர் சமூகமும் இதில் பலியாகத்தான் வேண்டுமா?

உலகிலேயே மிக மெதுவாக வேலை பார்க்கும் ஊழியர் என்று அநாகரிகமான முறையில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வங்கி அலுவலர் தொடர்பான காணொலி சமீபத்திய உதாரணம். ஆயிரக்கணக்கானோரால் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்தக் காணொலியில் இடம்பெற்றிருந்த அந்தப் பெண் உண்மையில், கடுமையான உடல்நல பாதிப்புகளிலிருந்து மீண்டு சமீபத்தில் மீண்டும் வேலைக்கு வந்தவர் என்பது பின்பு தெரியவந்திருக்கிறது. கடுமையான வசைகளோடு அந்தக் காணொலியைப் பகிர்ந்த ஆயிரக்கணக்கானோரில் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர் என்பதை என்னவென்று சொல்வது? கடுமையான விமர்சனங்களின் தொடர்ச்சியாக அந்தப் பதிவை நீக்கியதோடு, உணர்ச்சிவசப்பட்டுத் தான் பகிர்ந்துகொண்டுவிட்டதாக ஜெயமோகன் மன்னிப்பும் கேட்டார் என்பது வேறு விஷயம். முதலில் இப்படியான கும்பல் மனோபாவக் கலாச்சாரத்தில் எழுத்தாளர்களும் சிக்குகிறார்கள் என்பதே சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

எழுத்தோடு வாழ்வது, எழுதியதை மீண்டும் மீண்டும் திருத்துவது, நெருக்கமான வட்டத்தில் அதைப் பகிர்ந்துகொண்டு தேவைப்பட்டால் விமர்சனங்களுக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்வது எனும் எழுத்தாளர்களின் இயல்புக்கு முற்றிலும் நேர் எதிராக, ஒரு கருத்து தோன்றியபோதே அதைப் பிரசவித்துவிட வேண்டும் என்ற பரபரப்பைத் தன்னியல்பாகக் கொண்டது இணையம். உண்மையில், படைப்பாளிகளுக்கு இப்போதுதான் பொறுப்பு கூடியிருக்கிறது!

SCROLL FOR NEXT