இந்தியா முழுவதும் இருநூற்றைம்பதுக்கும் அதிகமான மேடைகளைக் கண்டிருக்கிறது கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம். தற்போது, அவரது எண்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில், இந்த நாடகம் நவம்பர் 18 அன்று சென்னை நாரத கான சபாவில் அரங்கேறவிருக்கிறது.
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நாடகங்களில் ஒன்றான இந்த நாடகத்தை அவருடைய ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ நாடகக் குழுவினரே மேடையேற்றவிருக்கின்றனர். கோமல் சுவாமிநாதனால் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாடகக் குழுவுக்கு அவருடைய மகள் லலிதா தாரிணி 2012-ம் ஆண்டு புத்துயிர் கொடுத்திருக்கிறார். இப்போது ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தையும் அவரே தயாரித்து இயக்குகிறார். “எங்களுடைய ‘ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ்’ குழுவினர் சார்பாக அப்பாவின் நாடகங்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். அவருடைய பெரும்பாலான நாடகங்கள் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானதாக ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தைச் சொல்லலாம். அதனால் அவருடைய எண்பதாவது ஆண்டைக் கொண்டாடுவதற்கு இந்த நாடகம்தான் சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவுசெய்தோம்” என்கிறார் லலிதா தாரிணி.
இந்த நாடகத்தை கோமல் சுவாமிநாதன் எழுதி இருபத்தைந்து ஆண்டுகளாகின்றன. ஆனால், அவர் அன்று பேசியிருக்கும் தண்ணீர் பிரச்சினை இன்றளவும் உலகளாவிய பிரச்சினையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நாடகம் திரைப்படமாக வெளியாகி, திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. “இந்த நாடகத்தை இன்றைய தலைமுறையினரிடம் அதிக அளவில் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். அதனால், கல்லூரிகளிலும், கல்லூரி மாணவர்களிடமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். நாடகத்தின் தொடக்கத்தில் கோமல் சுவாமிநாதன் பற்றிய உரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்கிறார் லலிதா தாரிணி.
பதின்மூன்று நடிகர்களுடன், மேம்படுத்தப்பட்ட மேடை வடிவமைப்புடன் இந்த நாடகம் 110 நிமிடங்கள் நடக்கவிருக்கிறது.
இடம்: நாரத கான சபா, டிடிகே சாலை, சென்னை
நாள்: நவம்பர் 18
நேரம்: மாலை 6.30
நுழைவுச்சீட்டுகளுக்கு: www.eventjini.com