இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எளிமையான நாவல்கள் மூலம் சமத்துவத்தை வலியுறுத்தும் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்க்கு (82) நோபல் பரிசை நடுவர் குழு நேற்று அறிவித்தது.
இவர் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். நவீன பிரான்ஸ் நாட்டின் சமூக வாழ்க்கையின் உள்ளார்ந்த விஷயங்களை இவர் மிகவும் நுட்பமாக தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது பல புத்தகங்கள், பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பல ஆண்டுகளாக பாடப் புத்தகங்களாக இருக்கின்றன. உணர்வுகள் மற்றும் நினைவில் உள்ள விஷயங்கள், அனுபவங்களை, தைரியத்துடன், அர்ப்பணிப்புடனும் வெளிப்படுத்தியற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நடுவர்கள் குழு தெரிவித்தது.
நோபல் பரிசுடன், 9,11,400 அமெரிக்க டலர் (ரூ.7 கோடியே 48 லட்சம்) பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை, ஸ்டாக் ஹோம் நகரில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் விழாவில் எர்னாக்ஸ் பெறுவார்.
இலக்கியத்துக்கான நோபல்பரிசு முதல் முதலில் கடந்த 1901-ம்ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதுவரை 119 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இலக்கியத்துக்கன நோபல் பரிசு பெறும் 17-வது பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.