இலக்கியம்

தொடுகறி: மதுரையின் இளம் நாவலாசிரியர்!

செய்திப்பிரிவு

மதுரையில் 12 வயது சிறுமி ரெப்லின், ஆங்கிலத்தில் 108 பக்க நாவல் ஒன்றை வெளியிடவிருக்கிறார். ‘த வென்ச்சர்சம் செவன்’ (The Venturesome Seven) என்ற இந்த நாவல் அவரது இரண்டாவது படைப்பு வரும் நவம்பர் 17-ல் வெளியாகவிருக்கிறது. முன்னதாக, 10 வயதிலேயே ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார் ரெப்லின். “குழந்தையாக இருக்கும்போது, கதை கேட்டு வளர்ந்தவள், இப்போது பள்ளி நூலகத்திலிருந்து தினம் ஒரு புத்தகத்தோடு வருகிறாள். இரண்டு நாட்களுக்குள் வாசித்துவிட்டு அதைப் பற்றிப் பேசுவதுதான் அவளைப் படைப்பாளியாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன்”என்கிறார் அவளது அப்பா எட்வின்!

ஒரு கிரீஷ் கர்னாட் கட்டிங்!

கர்நாடகத்தின் பசவண்ண குடியின் சிகை திருத்தும் கலைஞர் ஹரீஷு. ஒருபுத்தகம்கூட எழுதியிராத இவர் அகில பாரத கன்னட சாகித்திய சம்மேளனத்தின் விருதைப் பெற்றிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியி ருக்கிறது. இலக்கியத்துக்கு அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறார் ஹரீஷ்? தன்னுடைய கடையிலேயே ஒரு பகுதியைப் புத்தக விற்பனையக மாக மாற்றியிருக்கிறார். வாடிக்கை யாளர்களுக்கு குவெம்பு, பேந்த்ரே, கிரீஷ் கர்னாட், யூ. ஆர். அனந்த மூர்த்தி என்று ‘இலக்கியவாதிகள் பாணி’யில் முடிவெட்டி விடுகிறார். மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப் பட்டதை நவம்பர்தோறும் ‘ராஜ்யோத்ஸவம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறது கர்நாடகம். இந்தமாதத்தில் ஒவ்வொரு நாளும் அறுபதுக்கும் மேற்பட்டோருக்குக் கன்னட இலக்கிய நூல்களை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஹரீஷ்!

சில்லறை இருக்குமா பாஸ்?

மோடி நடத்திய ‘ரூ.1000, ரூ.500 துல்லியத் தாக்குத’லின் தொடர்ச்சியாகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும். “ஆயிரம், ஐந்நூறு நோட்டுகளை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம்; இப்போவாச்சும் வந்து புத்தகம் வாங்குங்க மக்கா” என்று ஃபேஸ்புக்கில் நேரடி அழைப்பு விடுத்தார்கள் சிலர். “உங்க கிட்ட சில்லறை இருக்குதுன்னு சொன்னாங்க” என்று சில்லறை கேட்க வந்தவர்கள்தான் மிச்சமாம். கொடுமை!

எழுத்தில் உயிர்க்கும் சினிமா அனுபவம்

எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கும் திரைப் பட இயக்குநர் நவீன், திரைப்பட உதவி இயக்குநர்களின் வேலை மற்றும் வழிமுறைகளைப் பற்றி ’நீங்களும் இயக்குநராகலாம்’ எனும் நூலை எழுதியவர். தற்போது ‘உத்ரா’ படத்தை இயக்கிக்கொண்டிருப் பவர் வளர்ந்துவரும் டிஜிட்டல் சினிமாபற்றி ‘நீங்களும் இயக்குநராகலாம் - பாகம் 2’-ஐ எழுதி முடித்திருக்கிறார்!

அமெரிக்கத் தேர்தலின் இலக்கிய சாட்சியங்கள்!

அமெரிக்கத் தேர்தலையொட்டி நியூயார்க் டைம்ஸ் ஒரு காரியம் செய்திருக்கிறது. முன்னணிப் படைப்பாளிகளிடம் அமெரிக்கத் தேர்தலைப் பற்றிக் கதைகள் எழுதச் சொல்லி, அவற்றை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் கதையைப் பிரபல நைஜீரிய இளம் பெண் எழுத்தாளர் சிம்மமாந்த என்கோசீ அடீச்சீ எழுதியிருக்கிறார். நேரடியாக ட்ரம்ப், மெலனியா, டிஃபானி போன்றவர்களை வைத்தே கதையை எழுதியிருக்கிறார் அடீச்சீ!

SCROLL FOR NEXT