குழந்தைகள் தினம்: நவம்பர்-14 |
தமிழ்ச் சிறார் இலக்கியம், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி, கவிமணி, சக்தி வை. கோவிந்தன் என பலரது பங்களிப்புடன் உற்சாகத் தொடக்கம் பெற்றது. கடந்த நூற்றாண்டின் மத்தியிலும் அதைத் தொடர்ந்தும் உச்சத்தைத் தொட்ட பல சாதனையாளர்களைத் தந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பொதுச் சமூகத்திலும் இவர்கள் போதிய கவனம் பெறாத நிலையில், தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முக்கியமான சாதனையாளர்களுள் சிலரைத் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆரம்பத்தில் தமிழாசிரியராகவும் பிறகு பேராசிரியராகவும் பணியாற்றிய அவர், 1901-ம் ஆண்டிலேயே குழந்தைப் பாடல்களை எழுத ஆரம்பித்துவிட்டார். 1938-ல் வெளியான அவருடைய ‘மலரும் மாலையும்’ தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களும், 7 கதைப் பாட்டுகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு' இன்றளவும் பிரபலமான அவருடைய குழந்தைப் பாடல்.
சக்தி வை. கோவிந்தன்
‘சக்தி காரியாலயம்' என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவந்த வை. கோவிந்தன், தமிழின் மிகப் பிரபலமான - அதிகம் விற்ற முதல் சிறார் இதழை நடத்தியவர். எழுத்தாளர் தமிழ்வாணனை ஆசிரியராகக் கொண்டு 1947-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘அணில்' என்ற வார இதழே அது. அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பின்னர்தான், தமிழில் சிறார் இதழ்கள் பிரபலமடைய ஆரம்பித்தன.
நாடு விடுதலை பெறுவதற்கு முன் மேற் கொள்ளப்பட்ட முக்கிய சிறார் கதை முயற்சிகளில் இவருடைய ‘தமிழ்நாட்டுப் பழங்கதைகள்' முக்கியமானது. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘ஈசாப் குட்டிக் கதைகள்’, ‘தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்’ போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. 1940-50-களில் வெளிநாட்டுச் சிறார் கதைகள் தமிழில் அதிகம் வந்திராத நிலையில், அவருடைய பங்களிப்பு முக்கியமாகிறது.
‘தமிழ்ப் பதிப்புலகின் தந்தை’ எனப்படும் வை. கோவிந்தன், குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவப்படக் காரணமாக இருந்தவர். அதன் முதல் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார்.
அழ. வள்ளியப்பா
தமிழில் குழந்தைப் பாடல்கள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பெயர் அழ. வள்ளியப்பா. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாராட்டைப் பெற்றவர். 'குழந்தைக் கவிஞர்' என்று பட்டத்தையும் பெற்றவர். ‘கைவீசம்மா கைவீசு’, ‘தோசையம்மா தோசை’, ‘அம்மா இங்கே வா வா’, ‘மாம்பழமாம் மாம்பழம்’... என அன்று முதல் இன்றுவரை அவருடைய பாடல்கள் காலங்களைக் கடந்து பிரபலம். இதற்கு முக்கியக் காரணம் பாடுவதற்கு வசதியாக எதுகை மோனையுடனும் எளிதான சொற்களிலும் அவை அமைந்திருப்பதுதான்.
வை. கோவிந்தனின் சக்தி காரியாலயத்தில் வேலை பார்த்த இவர், தி.ஜ.ர.வின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்தார். வங்கி வேலை கிடைத்த பிறகும், தொடர்ந்து குழந்தைகளுக்கு எழுதிவந்தார். 1944-ம் ஆண்டில் அவருடைய முதல் குழந்தைப் பாடல் தொகுப்பான ‘மலரும் உள்ளம்' வெளியானது. ‘சிரிக்கும் பூக்கள்' அவருடைய முக்கியமான பாடல் தொகுதி. ‘ஈசாப் கதைப் பாடல்கள்', ‘பாட்டிலே காந்தி கதை' போன்றவை பாடல்கள் மூலமாகவே கதை சொல்பவை. அவருடைய ‘நீலா மாலா' தொடர்கதை பின்னாளில் தொலைக்காட்சித் தொடரானது. 14.04.1950 தமிழ் வருடப் பிறப்பன்று குழந்தை எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர், நீண்ட காலம் அதன் செயல்பாடுகளுக்கு ஊக்கத்துடன் உழைத்துவந்தார்.
பெ. தூரன்
தமிழில் குழந்தைகளுக்கான முதல் கலைக்களஞ்சியத்தை முதன்மை ஆசிரியராக இருந்து தொகுத்தவர் பெ. தூரன். 1948-ல் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ சார்பில் இந்தப் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டார். முதலில் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளையும், அடுத்ததாக குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் ஒவ்வொன்றாகத் தொகுத்து வெளியிட்டார். இந்தப் பணி 1976 வரை நீண்டது.
கலைக்களஞ்சியத்துக்காக அவர் பெயர் பெற்றிருந்தாலும் அவர் மிகச் சிறந்த சிறார் எழுத்தாளர் என்பது இந்தக் காலத்தில் பலரும் அறியாதது. குழந்தைகளுக்குக் கதை (தரங்கம்பாடி தங்கப் புதையல், கடக்கிட்டி முடக்கிட்டி), பாடல், நெடுங்கதை, அறிவியல் என 14 நூல்களை இயற்றியுள்ளார். நேஷனல் புக் டிரஸ்ட்டின் 'பறவைகளைப் பார்' உள்ளிட்ட முக்கியமான சில சிறார் நூல்களை மொழிபெயர்த்தும் உள்ளார். பகத் சிங் தூக்கிலிடப்பட்டதற்காகப் பட்டப் படிப்பை நிறைவு செய்ய மறுத்த அவர், அடிப்படையில் கணித ஆசிரியர். பத்மபூஷன் விருது பெற்றிருக்கிறார்.
ஆர்.வி.
விடுதலைப் போராட்ட வீரரான எழுத்தாளர் ஆர்.வி. (ஆர். வெங்கட்ராமன்) தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு பாபநாசம் கிளைச் சிறையில் 1941-ல் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் இதழியல் வேலையில் சேர்வதற்காக சென்னை வந்தார். 1942-ல் கலைமகள் காரியாலயத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் சார்பில் 'கண்ணன்' என்ற சிறார் இதழ் 1950-ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, 1972 வரை அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பல ஆரம்ப நிலை எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர். அவர்களில் ஆதவன், அம்பை போன்றவர்கள் பின்னாளில் இலக்கிய எழுத்தாளர்களாகப் பரிணமித்தனர்.
ஆர்.வி.யின் ‘சந்திரகிரிக் கோட்டை’, ‘காளிக்கோட்டை ரகசியம்’ போன்ற சிறார் நெடுங்கதைகள், ‘காலக்கப்பல்’ என்ற அறிவியல் கதை, ‘இரு சகோதரர்கள்’ என்ற சித்திரக்கதை போன்றவை குறிப்பிடத்தக்கவை. 15 தொடர் படக்கதைகளை எழுதியிருக்கிறார்.
தம்பி சீனிவாசன்
தமிழ் சிறார் இலக்கியத்தின் முக்கியமான பாடலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் தம்பி சீனிவாசன். அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்ட இவர், சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகச் சென்னையில் பணியாற்றியவர்.
அவர் எழுதிய 'தங்கக் குழந்தைகள்' என்ற நாடகம் மத்திய அரசின் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ‘சிவப்பு ரோஜாப்பூ’ என்ற பாடல் தொகுப்பு, புதிய பாடல் சந்தங்களையும் பாடுபொருட்களையும் கொண்டதற்காகப் புகழ்பெற்றது. நேஷனல் புக் டிரஸ்ட்டின் 'குட்டி யானை பட்டு', 'யார் கெட்டிக்காரர்', 'ஜானுவும் நதியும்' உள்ளிட்ட புத்தகங்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக இருந்த அதேநேரம் நேரடிக் கதை, நாடகம், பாடல்களையும் நிறைய எழுதியிருக்கிறார்.
'கல்வி' கோபாலகிருஷ்ணன்
தேசிய அளவில் அறியப்பட்ட முக்கியமான தமிழ்ச் சிறார் எழுத்தாளர் 'கல்வி' கோபாலகிருஷ்ணன். தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியலை எழுதிவந்தவர். 300-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
பாடப் புத்தகங்களுக்கு ஓவியம் வரையும் வேலையைச் செய்துவந்த அவர், ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில் 'கல்வி' என்ற இதழை ஆரம்பித்தார். அதில் எழுதுவதற்கு எழுத்தாளர் பற்றாக்குறை வரவே, அவரே முழுமூச்சுடன் எழுதி இதழைக் கொண்டுவந்தார். அம்முயற்சி பிரபலம் அடைந்து, 'கல்வி'யும் அவருடைய பெயருடன் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து அறிவியல் தகவல்கள், அறிவியல் புதிர்களைக் கதைகளாக எழுதினார்.
பல நாட்டுக் குழந்தைகளின் பின்னணியை அறிமுகப்படுத்தும் 'பறக்கும் பாப்பா' என்ற கதாபாத்திரத்தை 'சுதேசமித்திரன்' தீபாவளி மலரில் அறிமுகப்படுத்தினார். அது பிரபலமடையவே, பின்னர் அந்தக் கதாபாத்திரம் அவருடைய பல நூல்களில் கதை சொன்னது. 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா' (பரிணாமத்தின் கதை), 'கானகக் கன்னி' (தாவரங்களைப் பற்றி), 'மந்திரவாதியின் மகன்' (பூச்சிகளின் வாழ்க்கை), 'பாலர் கதைக் களஞ்சியம்' உள்ளிட்டவை குறிப்பிடத் தக்க நூல்கள். அவருடைய 'மிட்டாய் பாப்பா' (எறும்பு, தேனீக்கள் பற்றி) யுனெஸ்கோவின் பரிசைப் பெற்றது.
பூவண்ணன்
தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றை பதிவு செய்யும் முயற்சியாக ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்ற நூலை எழுதியவர் பூவண்ணன். வே.தா. கோபாலகிருஷ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியவர். அவருடைய ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூலும் புகழ்பெற்றது.
1955-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் அவ ருடைய ‘உப்பில்லாத பண்டம்’ முதல் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ‘ஆலம் விழுது', ‘காவேரியின் அன்பு' ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் ‘நம்ம குழந்தைகள்', ‘அன்பின் அலைகள்' என்ற பெயரில் திரைப்படமாகின. தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தன.
முல்லை தங்கராசன்
தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர் முல்லை தங்கராசன். ‘மணிப்பாப்பா’ (1976), ‘ரத்னபாலா’ (1979) என்கிற 70-களின் இரண்டு பிரபல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகச் செயல்பட்டவர். முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.
கார், லாரி ஓட்டுநராகத் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லை தங்கராசன், மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர். குழந்தைக் கதைகள் என்றாலே நீதிபோதனைக் கதைகள்தான் என்பதற்கு மாறாக சுவாரசிய மான, நகைச்சுவையான, சாகசமான கதைகள், அவர் ஆசிரியராகச் செயல்பட்ட இதழ்களில் வெளியாகின. சிறார்களுக்கான சித்திரக் கதைகள், ஓவியங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.
வாண்டுமாமா
தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றில் ‘கோகுலம்' (1972), ‘பூந்தளிர்' (1984) என மிகவும் பிரபலமான இரண்டு சிறார் இதழ்களுக்கு முதல் ஆசிரியராக இருந்தவர் வாண்டுமாமா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஓவியராகும் ஆர்வத்துடன் இதழியல் துறைக்கு வந்தார். விரைவிலேயே குழந்தை எழுத்தாளராக மாறினார். அவருடைய குழந்தை எழுத்து ஆர்வத்துக்காகவே கல்கி நிறுவனம் 'கோகுல'த்தைத் தொடங்கியது.
சிறார் கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு என அனைத்துத் துறை களைப் பற்றியும் குழந்தைகளைக் கவரும் வகையில் எழுதியவர் வாண்டு மாமா. ஓவியர் செல்லத்துடன் இணைந்து சித்திரக்கதை எனும் வடிவத்தை தமிழில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்.
பலே பாலு, சமத்து சாரு போன்ற பல்வேறு குணாதியசங்களைக் கொண்ட அவருடைய குழந்தைக் கதாபாத்திரங்கள் சிறார் உலகின் நிரந்தர மனிதர்களாகவே மாறினார்கள். 65 நெடுங்கதைகள்-கதைகள், 28 சித்திரக் கதைகள், 45 அறிவியல் நூல்கள் என 160-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். 'கனவா, நிஜமா?', 'ஓநாய்க்கோட்டை' போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை. 'தோன்றியது எப்படி' (4 பாகங்கள்), 'மருத்துவம் பிறந்த கதை', 'நமது உடலின் மர்மங்கள்' முக்கியமான கதையல்லாத புத்தகங்கள்.
- ஆதி வள்ளியப்பன்
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in