தமிழில் மானுடவியல் தொடர்பான புத்தகங்கள் அரிதாகவே வெளிவருகின்றன. அந்த வரிசையில் ஜே. அருள்தாசன் தொகுத்திருக்கும் ‘கன்னியா குமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்’ என்னும் நூலையும் சேர்க்கலாம்.
மீனவ மக்கள், பழங்குடி மக்களுடன் ஒப்பிடத் தக்க வகையில் தங்களுக்கெனத் திண்ணிய வாழ்க்கை முறை கொண்டவர்கள். இன்றைக்கு மாறிவரும் பொதுச் சமூகத்தின் இலக்கணத்திலிருந்து மாறுபட்டுத் தங்கள் தொன்மையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்துவருபவர்கள் என்றும்கூடச் சொல்லலாம்.
இந்த நூல் குமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பல சமூகத்தினர் குறித்துப் பதிவுசெய்கிறது. பரதவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான போரையும் ஆதாரங்களுடன் இந்த நூல் சொல்கிறது. மீனவ மக்களிடையே கிறிஸ்தவம் எப்படி வேர் பிடித்தது என்பதையும் விளக்குகிறது.
மற்ற மாவட்ட மீனவர்களுடன் ஒப்பிடும்போது குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில், அவர்கள் தமிழ்-மலையாளப் பின்னணி கொண்டவர்கள். இந்தப் பின்னணி அவர்கள் வாழ்க்கைமுறையிலும் புழங்கு மொழியிலும் பிரதிபலிக்கிறது. குமரி மாவட்ட மீனவர்களின் வழக்குச் சொல்லகராதிபோல் நூலில் புழங்கு சொற்களைத் தொகுத்து அதற்கான பொருளைக் கொடுத்திருக்கிறார் ஜே. அருள்தாசன். மேலும், அவர்களின் வாழ்க்கைச் சடங்குகள், பழக்க வழக்கங்களையும் தொகுத்தளித்திருக்கும் ஜே. அருள்தாசன், இந்த நூல் மூலம் தமிழ் மானுடவியலுக்கு வளம் சேர்த்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்
ஜே. அருள்தாசன்
ரூ. 250/-
மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், சென்னை-600041
98412 30023