இலக்கியம்

சுக்கு காப்பி: விருது வாங்கலியோ விருது

செய்திப்பிரிவு

தமிழில் கவிதை, கதை, கட்டுரை எழுதும் எவரொருவரும் விருது பெறாமல் இருந்துவிட முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாகத் தினந்தோறும் புதிது புதிதாக இலக்கிய விருது அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இலக்கிய உலகில் அறியப்பட்டவராக உருவெடுக்க, ஒருவருக்கு எழுதத் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை, ஓர் அமைப்பை நிறுவி -அமைப்பு என்றதும் பலர் என்ற விபரீதக் கற்பனைக்கும் போய்விட வேண்டியதில்லை, ஒருவர்கூட அதை நிறுவிவிடலாம்- அதன் சார்பில் விருதுகளை வழங்கத் தொடங்கினால் போதும். விருதின் பெயரும் விருது வழங்கும் அமைப்பின் பெயரும் அதன் மூலம் அந்த விருது வழங்குபவரது பெயரும் பிரபலமாகிவிடும். வறுமையில் வாடும் தமிழ் எழுத்தாளருக்கு விருது என்பது கவுரத்துக்குக் கவுரவம், அடுத்த நூலில் நூலாசிரியர் குறிப்பில் மேலும் ஒரு வரி சேர்த்துக்கொள்ளலாம்.

விருது வழங்கும் அமைப்புக்குத் தோதான சிலரை நடுவர் குழுவாக அமைத்துவிட்டால். அந்தக் குழு ‘தகுதியான’வரைத் தேர்ந்தெடுத்துத் தந்துவிடும். நடுவர் குழுவுக்கும் அலைந்து திரிய வேண்டியதில்லை. நடுவர் குழுவுக்கெனவே எல்லோருக்கும் நல்லவராகத் தோற்றம் கொள்ளும் சிலரை நேர்ந்துவிட்டிருக்கிறார்கள். தகுதியானவர்களைக் கண்டறியும் பணியும் சிரமமானதில்லை, எப்போதுமே அவர்கள் நடுவர் குழுவைச் சுற்றியே உலவிக்கொண்டிருப்பார்கள்.

எல்லோருமே எழுதித்தான் பெயரெடுக்க வேண்டுமா என்ன, சிலராவது விருதுகளை வாங்கியும் வழங்கியும் பெயரெடுக்கட்டுமே!

SCROLL FOR NEXT