கோயில் கோபுரங்கள்! பக்தியில் ஆழ்ந்துவிட்டவர்களுக்கு அவை கோபுரங்கள் என்பதைத் தவிர வேறெதுவுமே தேவையில்லை. ஆனால், அவை கட்டியெழுப்பப்பட்ட காலம், கட்டிட அமைப்பு, நிர்மாணித்த மன்னர்கள், பங்கேற்ற சிற்பக் கலைஞர்கள், செழித்தோங்கிய கலைகள், வளம்பெற்ற வரலாறு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு பார்க்கும்போது ரசிக மனம் நிறைவடையும். அப்படியொரு நிறைவுக்கு அழைத்துச் செல்கிறது கோயில் கோபுரங்களை யும் அரண்மனைகளின் கோபுரங்களையும் பற்றி முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் விரிவாக எழுதிய ‘தமிழகக் கோபுரக்கலை மரபு’ புத்தகம்.
பரிசாகக் கிடைத்த கோபுரம்!
தமிழகத்தில் வடக்கே மகாபலிபுரம் தொடங்கி தெற்கே தென்காசிவரை இடைப்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சில கோயில்களையும் அரண்மனைகளையும் ஆய்வுக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகக் கோயில்களை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியக் கட்டடக் கலையில் கோபுரம் என்னும் கட்டுமானம் வழக்கத்தில் இருந்தாலும் கி.பி. ஆயிரமாவது ஆண்டுக்குப் பிறகே தமிழகத்தில் கோபுரக் கலை நுழைகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு ஆதாரமாகப் பல்வேறு தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
கோபுரம் என்னும் சொல் குறித்துத் தொடங்கும் ஆராய்ச்சி ஸ்தூபிகள் உருவான விதம், அது சங்க காலத்தில் தமிழகத்துக்குள் பரிசு வடிவில் நுழைந்தது, பிற மொழிக் கலைகளோடு ஒப்புமை, கோபுரக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் எனத் தடையில்லாத நீரோடை போலவே பயணிக்கிறது.
நின்று எரியும் தீ
யாக குண்டத்திலிருந்து கொழுந்துவிட்டு எரிகிற தீப்பிழம்பின் உருவமாகவே கோபுரங்கள் எழுப்பப்பட்டன. தீயைத் தாண்டி எந்தத் தீய சக்தியும் கோயிலுக்குள் நுழைய முடியாது என்ற நம்பிக்கையால் கோபுரங்கள் அப்படி வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இதுவே கோபுரத் தத்துவம்.
காப்பு, உயரம், அலங்காரம் ஆகிய மூன்றும்தான் கோபுரக் கட்டுமானத்தின் அடிப்படை கூறுகள் என்று குறிப்பிடும் ஆசிரியர், பீடத்தில் தொடங்கி சிகரம் வரை கோபுரக் கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கியிருக்கிறார். கால ஓட்டத்தில், கலாச்சார மாற்றத்தில் கோபுரங்களும் பல்வேறு வகையான மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன. திருப்பணிகள் கோயிலைப் புதுப்பிப்பதுடன், புராதனக் கலையோடு சமகால மாற்றங்களையும் லேசாகச் சேர்த்துவிடுவதும் உண்டு. அவற்றின் சாதக பாதகத்தைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்.
பண்டைய தமிழ் மன்னர்களின் அரண்மனைக் கோபுரங்கள் சுவடின்றி அழிந்துபோன நிலையில் எஞ்யிருப்பவற்றுள் தஞ்சாவூர், ராமநாதபுரம் அரண்மனைகளின் வாயில் கோபுரங்களை ஆசிரியர் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார்.
வரலாற்று ஆவணம்
பல்வேறு கோயில்களின் கோபுரக் கட்டுமானங் களை விளக்கும்போதே அவற்றுக்கு நடுவே புராதனத் தகவல்கள், மன்னர்கள் பற்றிய அரிய செய்திகள், வித்தியாசமான சிற்பங்கள் போன்ற தகவல்கள் இடம்பெறுவது வாசிப்பை இனிமையான அனுபவமாக்குகின்றன. கோபுரங்களில் இடம் பெற்றிருக்கும் கடவுள் சிற்பங்கள், மனித உருவச் சிலைகள் ஆகியவற்றின் பின்னால் இருக்கும் கதையும் காரணமும் வரலாற்றுச் சுவடுகள்!
நாட்டிய மாதர், கழைக் கூத்துக் கலைஞர்கள், நாகஸ்வரம், தவில் இசைக்கும் கலைஞர்கள் போன்ற சிற்பங்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் ஆட்சி செலுத்திய கலைகளைக் கண்முன் கொண்டுவருகின்றன. இவை மட்டுமல்லாமல் சுதை சிற்பங்கள், செங்கல் சிற்பங்கள், மரச் சிற்பங்கள், கோபுரங்களில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்களையும் கவனத்துடன் பதிவுசெய்திருக்கிறார்.
வரலாற்றுத் தகவல்களுக்குப் பக்கபலமாக நின்று நம்மை வழிநடத்துகின்றன ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்களும் ஓவியங்களும். காலத்தாலும் இயற்கைச் சீற்றங்களாலும் மக்களின் செய்கையாலும் பல கோயில்களும் அரண்மனைகளும் அழிந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் கோபுரங்களை ஆய்வு செய்து, அரிய தகவல்களைப் பதிவுசெய்திருக்கும் இந்நூல், மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம்.
- பிருந்தா சீனிவாசன்,
தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in
தமிழகக் கோபுரக்கலை மரபு
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
விலை: ரூ. 650.
வெளியீடு: அகரம், தஞ்சாவூர் 613007
04362-239289.