மும்பை தாராவியின் குடிசைப்பகுதியில் சிறுமி மெஹருன் னிசா, பேராசிரியர் ராமானுஜத்திடம் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள். இன்றும் அவள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார் அவர். பள்ளியளவில் ஒவ்வொரு குழந்தையும் எந்தத் தொழில், கைவேலை, சேவைக்கு உகந்தவர் என்று இனம் காணும் ஏற்பாடு மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை முன்வடிவில் காணப்படுகிறதே அது தேவையா? என்ற கேட்கிறார். வேலைவாய்ப்பு, தொழில் பெருக்குதல் என்று பேசிக் குலத்தொழிலையும் சாதி சார்ந்த தொழில் பங்கேற்பையும் நியாயப்படுத்தி நிலைப்படுத்தும் ஏற்பாடு நடந்தேறும் என்று தன் அச்சத்தை ‘மெஹ்ருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டுமே’ குறுநூலில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாடு முழுவதும் பத்தாம் வகுப்புக்கு ஒற்றைத் தேர்வு என்ற மத்திய அரசின் முயற்சி சரியானது அல்ல என்கிறார் பேராசிரியர் மணி. அனைத்து மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போடமுடியாது. மாநிலம் தழுவிய தேர்விலேயே விளிம்பு நிலை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அகில இந்தியத் தேர்வு மேலும் தீமையானது என்கிறார் ‘மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா’ என்ற குறுநூலில்.
கூடவே, ‘புதிய கல்விக் கொள்கை’ வரிசையில் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களாக அ. மார்க்ஸ் எழுதிய ‘அபத்தங்களும் ஆபத்துகளும்’, ஆயிஷா இரா. நடராசனின் ‘பற்றி எரியும் ரோம்… ஊர் சுற்றும் நீரோ…’, தேனி சுந்தர் எழுதிய ‘மகாராஜாவின் புதிய ஆடை’, பொ. இராஜாமாணிக்கத்தின் ‘கார்ட்டூன் வழி கல்விக் கொள்கை’, ‘மூன்று முன்னோட்டங்களும்... முக்கியக் கேள்விகளும்...’ ஆகிய நூல்களும், கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் ‘மாற்றுக் கல்விக் கொள்கைக்கான மக்கள் சாசனம்’ நூலும் அவசியமானவை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய நூல்கள்.
இந்த எட்டு நூல்களையும் வாங்குவதற்குத் தொடர்புகொள்ள:
பாரதி புத்தகாலயம், சென்னை:18
044 - 24332924