இலக்கியம்

மகத்தான தமிழ்ப் பணி!

செய்திப்பிரிவு

தமிழர்களைத் தேசிய நீரோட்டத்தில் கடந்த 144 ஆண்டுகளாக இணைத்து வருவது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். தமிழகத்திலிருந்து வெளியானாலும் தேசிய நாளிதழாக வெற்றிக்கொடி நாட்டியுள்ள ‘தி இந்து’, தமிழில் இல்லையே என்கிற தமிழர்களின் ஆதங்கத்தைப் போக்கும்விதமாக இந்து தமிழ் திசை நாளிதழை கடந்த 2013இல் தொடங்கியது ஒரு வரலாற்று நிகழ்வு.

பத்தாம் ஆண்டில் நுழையும் இந்து தமிழ் திசையின் தமிழ்ப்பணி மகத்தானது என்பதற்கு நாங்களே நேரடி சாட்சி. உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழுக்கு இருக்கை அமைத்திடத் தமிழ் இருக்கை குழுமம் முயன்று வரும் தகவலை, முதன் முதலில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்றது இந்து தமிழ் திசை நாளிதழ்.

மு.ஆறுமுகம்

தமிழ்நாட்டில் எத்தனையோ ஊடகங்கள் இருந்தாலும் இந்து தமிழ் திசைதான் தாமாகவே முன்வந்து இப்பணியைச் சிரமேற்கொண்டது. தமிழ் இருக்கை அமைக்கும் பணியினைச் செய்தியாக, தலையங்கப் பக்கக் கட்டுரைகளாகத் தொடர்ந்து வெளியிட்டு அதன் முக்கியத்துவத்தை உணரும்படி செய்தது. அதன் பயனாக இருக்கை அமைப்பதற்கான நன்கொடையைத் தமிழர்கள் மத்தியில் திரட்டவும், அன்றைய தமிழக அரசு, எதிர்கட்சி ஆகியோரின் நிதிப் பங்களிப்பு கிடைக்கவும் காரணமாக இருந்தது. இன்று வரை ஹார்வர்டு உள்ளிட்ட உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை, தமிழ் கற்கை வசதிகள் குறித்து துல்லியமான தகவல்களைத் தந்துவரும் செய்திப் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அ.முத்துலிங்கம்

தமிழை உலக அளவில் பரவலாக்கும் இந்து தமிழ் திசையின் மகத்தான இதழியல் பணி இதுவென்றால், ஹார்வர்டு இருக்கைக்கான களப்பணியிலும் கரம் கொடுத்தது. ஆம்! ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுமத்தின் சார்பில் அதன் இயக்குநர்களில் ஒருவரான முனைவர் மு.ஆறுமுகம், கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பின் நிறுவனர், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஆகியோரது முன்னெடுப்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கையின் தேவையை விளக்கும் பிரம்மாண்ட அறிமுக விழாவை சென்னை மாநகரில் ஒருங்கிணைத்துக் கொடுத்தது. அதே மேடையில் தமிழ் இருக்கை கீதம் ஒன்றை வெளியிடும் பணியிலும் கரம் கொடுத்தது. இந்து என்.ராம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பன்முகக் கலைஞர் சிவகுமார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நீதியரசர்கள் சந்துரு, கிருபாகரன் உள்ளிட்ட பலருடன் நானும் இவ்விழாவில் கலந்துகொண்டேன். இவ்விழாவுக்குப் பின்னர், தமிழ் இருக்கைக்கு நன்கொடைகள் குவிந்து, இருக்கை அமைக்கும் பணி வெகு வேகமாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக மார்த்தா ஆன் செல்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இருக்கையின் பணியும் இனிதே தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு முதல், தமிழகத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று முதுகலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்த் திறனாய்வுப் பிரிவின் கீழ் ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடரும் இந்தத் தமிழ்ப் பணியில் இந்து தமிழ் திசையின் பங்களிப்பு மென்மேலும் வளர்க.. வாழ்க என வாழ்த்தி வணங்குகிறேன்.

- டாக்டர் விஜய் ஜானகி ராமன்,
தலைவர், ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுமம்

SCROLL FOR NEXT