இலக்கியம்

பதிவர்கள் ஏன் சினிமா விமர்சனம் எழுதிக் குவிக்கிறார்கள்?

செய்திப்பிரிவு

சினிமாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புத்தகங்களுக்குத் தமிழ்ச் சமூகம் கொடுப்பதில்லை எனும் குறை காலங்காலமாகப் பேசப்பட்டுவருவதுதான். இந்தச் சூழலை மாற்றும் முயற்சிகளில் முன்னிற்பதில் எல்லோரையும்விட எழுதுபவர்களுக்கு முக்கியமான பொறுப்பு. எழுத்தாளர்கள் தொடர்ந்து அதைச் செய்துவருகிறார்கள்; சமூக வலைதளங்களில் இயங்கும் பதிவர்களும் இந்தப் பொறுப்பை உணர வேண்டும்.

இன்றைய சூழல் என்ன? சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பதிவர்கள் பலரும் வாரந்தோறும் தவறாமல் கருத்துரை எழுதிவிடுகிறார்கள். புத்தகங்களைப் பற்றி அல்ல; திரைப்படங்களைப் பற்றி. விமர்சனம் எழுதுவதற்காக எல்லாப் படங்களையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று ஊடகங்களில் திரைப்படப் பிரிவில் பணிபுரிபவர்கள் அலுத்துக்கொள்வதைப் பார்க்க முடியும். ஆனால், பதிவர்களுக்கு இந்த நிர்ப்பந்தமும் இல்லை; அலுப்பும் இல்லை. படங்களைத் தவறாமல் பார்த்துத் தங்கள் கருத்தை எடுத்துரைத்து, அவை குறித்த விவாதங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்பதில் பெரும் உவகையை இங்கே பார்க்க முடிகிறது. முக்கியமான அல்லது வித்தியாசமான படங்கள் என்று சொல்லத்தக்க படங்களுக்கு மட்டும் இந்த மரியாதை இல்லை. கடைந்தெடுத்த மசாலாப் படங்களுக்கும் இதே மரியாதை செவ்வனே தொடர்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பதிப்பகங்கள் இல்லை; இத்தனை புத்தகங்கள் வெளியானதில்லை; இத்தனை எழுத்தாளர்களும் இல்லை. ஆனால், இப்போது வருவதைவிடவும் அதிக எண்ணிக்கையில் மதிப்புரைகளும் விமர்சனங்களும் அப்போது வந்துகொண்டிருந்தன. இன்று வருவதைவிடவும் அதிகமான தீவிரத்தன்மையுடன் நூல்கள் விவாதிக்கப்பட்டன. இன்று நூல் வெளியீட்டுக் கூட்டங்கள், விமர்சனக் கூட்டங்களில் பேசப்படுவதைத் தாண்டி விமர்சனங்களும் மதிப்புரைகளும் அதிகம் வருவதில்லை. மாதந்தோறும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வரும் சூழலில் இவையெல்லாம் போதாது.

எல்லாத் தமிழ் திரைப்படங்களையும் பார்த்து அவை பற்றி எழுத நேரம் செலவிடும் எழுத்தாளர்கள் புத்தகங்களைப் படித்து அவற்றைப் பற்றி எழுதவும் சிறிது நேரம் செலவிட்டால் புத்தகங்களை மேலும் பரவலான வாசகர்களிடம் எடுத்துச்செல்லலாம். வாரந்தோறும் ஒரு சினிமாவைப் பார்த்து நொந்துகொண்டு பதிவுகள் போடுவதைக் காட்டிலும் ஒரு நல்ல நூலைப் படித்து அதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி வாசிப்புப் பண்பாட்டை வளர்த்தெடுக்கும். மொழிக்கு அது செழுமை சேர்க்கும்; அறிவுசார் சமூகத்தையும் அது வளர்த்தெடுக்கும்!

SCROLL FOR NEXT