இலக்கியம்

தொடுகறி! - நீ கலக்கு செல்லம்!

செய்திப்பிரிவு

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர் கதைகளை ‘நத்திங் பட் வாட்டர்’ எனும் நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வி.சைதன்யா. தற்போது ஏழாம் வகுப்பு படித்துவரும் இவர் மொழிபெயர்ப்புக்காக விருதுகளையும் பெற்றவர். எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் எழுதிய சிறுவர் கதைகளை சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தினம் ஒரு கதையென பத்துக் கதைகளையும் பத்தே நாட்களில் மொழிபெயர்த்திருக்கிறாராம் சைதன்யா!

வாழ்த்துக்கள், ராஜன் ஆத்தியப்பன்!

தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் 2016-ம் ஆண்டு கவிதைக் கான விருது ராஜன் ஆத்தியப்பனுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. கட்டிடத் தொழிலாளியாகவும் கவிஞராகவும் செயல்படுபவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜன் ஆத்தியப்பன். இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘கருவிகளின் ஞாயிறு’ நூலுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நூலை படிகம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

சேவைக்கு மரியாதை!

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான பத்மநாப ஐயர் ஈழப் படைப்பாளிகளுக்கு முகவரி ஏற்படுத்தித்தருவதைத் தன் வாழ்நாள் பணியாகச் சிரமேற்கொண்டுவருபவர். ஈழத் தமிழ்ப் படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்டாடிவரும் இவருடைய 75 வயது நிறைவதையொட்டி ‘நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் 75’ புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். விம்பம், காலச்சுவடு ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த மலர், அவருடைய வாசிப்பு, ரசனை, விருந்தோம்பல், பங்களிப்பு என அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

குட்டி நூலகம் அமைக்கலாமா?!

‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது ‘பாரதி புத்தகாலயம்’. அக்டோபர் 2 தொடங்கிய இந்த இயக்கம் குழந்தைகள் தினமான நவம்பர் 14 வரை நடைபெறவிருக்கிறது. சின்னச் சின்ன புத்தகங்கள், அழகான படங்கள், மலிவான விலை என்று செல்லங்களை சுண்டி இழுக்கும் முனைப்போடு இந்த இயக்கம் நடைபோடுகிறது. உருவாகட்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி நூலகம்!

சிறிய விஷயங்களின் அடுத்த கடவுள்!

‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல் மூலம் சர்வதேசப் புகழ்பெற்ற அருந்ததி ராய், அதற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக நாவல் எதையும் எழுதவேயில்லை. கட்டுரையாசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் புகழ்பெற்ற அருந்ததி ராய், அடுத்த ஆண்டு ‘தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ நாவலை வெளியிடவுள்ளார்.

SCROLL FOR NEXT