விருதுக்கு மரியாதை!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை எஸ்.வி. ராஜதுரைக்கு வழங்கியிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அயராமல் எழுதிக்கொண்டிருப்பவர் ராஜதுரை. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், விருதுத் தொகை ஒரு லட்சத்தைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குக் கொடுத்திருக்கிறார்.
எண்பது... கொண்டாடு!
கவிஞர் வைதீஸ்வரன் தன்னுடைய 80-வது பிறந்த நாளை செப்.25 அன்று ‘கோல்டன் பாரடைஸ்’ விடுதியில் கொண்டாடினார்.
அசோகமித்திரன் தம்பதி உட்பட அவருடைய நெருக்கமான நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள்.
சென்னையில் ‘தி இந்து' அலுவலகத்திலேயே இனி புத்தகம் வாங்கலாம்!
வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ‘தி இந்து’ வெளியீடுகள் சென்னை வாலாஜா சாலையில் உள்ள ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகத்திலும் இனி கிடைக்கும். வாசகர்கள் நேரில் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.
படம்: எல்,சீனிவாசன்.
தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கும் நூல்கள், மலர்கள் அனைத்தும் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக விற்பனை நேரம்: காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை.
முத்துநகரின் முதல் புத்தகத் திருவிழா
சென்னை, மதுரையைப் போன்று தூத்துக்குடியிலும் ஒரு புத்தகத் திருவிழா நடைபெறாதா என்ற ஏக்கம் தீர்ந்திருக்கிறது. தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மண்டபத்தில், முத்துநகரின் முதல் புத்தகத் திருவிழா நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. வருகிற 9ம் தேதி வரை புத்தகக்காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 90 அரங்குகள், 5 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி பதிப்பகங்களும் பங்கேற்றுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ‘தி இந்து’ சார்பிலும் அரங்கு (எண்: 5) அமைக்கப்பட்டுள்ளது.
- ரெ.ஜாய்சன், படம்: என்.ராஜேஷ்
அடுத்து அவதூறு வழக்கா?
தன்னுடைய சிங்கப்பூர் பயணத்தினூடே வழக்கம்போல காரசார விமர்சனம் ஒன்றை ஜெயமோகன் கொளுத்திப்போட, பதிலுக்கு அவர் மீது வழக்குப் போட்டிருக்கிறார் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர் ஒருவர்.