இலக்கியம்

நல் வரவு: சிலந்திகளின் உயிர்விரிமம்

செய்திப்பிரிவு

சிலந்திகளின் உயிர்விரிமம்

சிலந்திகளின் உலகத்தை அறிமுகப்படுத்தும் புத்தகம் இது. சிலந்திகள் பற்றிய தவறான நம்பிக்கைகளை உடைப்பது புத்தகத்தின் முதல் சாதனை. வீடுகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தொடங்கி வயல்களில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புக்கு எப்படி உதவுகின்றன என்பது வரை உயிரினப் பன்மைக்குச் சிலந்திகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. அடுத்த முறை ஒட்டடைக்குச்சியை எடுக்கும் முன் யோசிக்கவைக்கும் இந்தப் புத்தகம். வண்ணப் படங்கள் கூடுதல் அழகு!

தமிழகத்தின் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் இலக்கியப் பதிவுகளும்

முனைவர் பட்டத்துக்கான இந்த ஆய்வில் 1948 முதல் 2004 வரை ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளும் 1993 முதல் 2004 வரையான இலக்கியப் பதிவுகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சாதிரீதியான அரசியல் இயக்கங்கள் செயல்படுகிற இந்தக் காலத்தில் இத்தகைய ஆய்வுகள் ஜனநாயகத்தைப் பலப்படுத்த உதவும். இந்த நூலின் கால எல்லைக்கு பிறகான காலகட்டத் துக்கும் இது போன்ற பதிவுகள் அவசியமாகிறது.

கதாகாலம்

சூதர்களும் பாணர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் மகாபாரதத்தின் சில கதை நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் கதைதான் கதாகாலம். குறிப்பாக மகாபாரதத்தில் ராஜதர்மம், க்ஷத்திரிய தர்மம் என்ற பேரால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்களின் துயரங்கள் மீதும் மௌனங்கள் மீது வெளிச்சம் குவிக்கும் படைப்பு இது. காலம் காலமாகத் தொடர்வது பெண்களின் துயரம் என்பதால் தற்காலத் தன்மையுடையதாக மாறுகிறது இந்த நாவல்.

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர் மிர்சா காலிப். அழகுணர்ச்சியையும் வாழ்க்கையின் கொண்டாட்டமான தருணங்களையும் தமது கவிதைகளில் பாடிய கவிஞர்களிலிருந்து விலகி விளிம்பு நிலை மக்களின் வலியைக் கவிதையில் பாடினார் காலிப். சிப்பாய்க் கலகத்துக்கு முன்பாகவும் பின்பாகவும் நடந்த மாற்றங்களையும் இவரது கவிதைகள் கவனப்படுத்துகின்றன.

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

முருகன், விநாயகன், ஞானப் பார்வை, புரானிகம், தொன்மம், வேலன் வெறியாட்டு, தமிழ்ப் பாரம்பரியம், திராவிடம், ஆரியம் என அறிந்த சொற்களைக் கொண்ட புதுவகை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஆனால் இதை வாசித்துப் புரிந்துகொள்ளத் தமிழ் மொழி அறிவு மட்டும் போதாது. எளிய வாக்கியமாக எதுவும் அமைந்து விடக் கூடாது என்ற நுண்ணுணர்வுடன் இந்த நூலை எழுதியுள்ளார் ஆசிரியர்.

மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமாக மார்க்சியம் அறியப்பட்டாலும், அதைப் படித்து அறிந்துகொள்வதில் பாட்டாளிகளுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கே கூட கொஞ்சம் சிரமம்தான். இதை முற்றாய் உணர்ந்தவராய் சிகரம் ச.செந்தில்நாதன் மார்க்சியம் குறித்த அறிமுகத்தை எளிய வாசிப்புள்ளவர்களும் படித்தறிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளார். இந்நூல் மார்க்சியத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கான எளிய கைவிளக்கு.

SCROLL FOR NEXT