திரைப்படமும் இலக்கியமும் சந்தித்துக்கொள்ளும் அபூர்வமான தருணங்கள் நம்மிடம் குறைவு. ஜெயகாந்தன் எழுதிய அளவுக்குத் திரையில் இயங்கவில்லை. திரை மொழியில் இலக்கியத்துக்கு நிகரான பல படைப்புகளைத் தந்த சத்யஜித் ரேயின் இன்னொரு ஆளுமை, அவரது இலக்கிய முகம்.
தனது படங்களில் ரே படைத்த கதாபாத்திரங்களின் உலகிலிருந்து அவரது எழுத்துலகம் பெரிதும் மாறுபட்டிருப்பது ஆச்சரியமே. அவர் ஒரு சாகச எழுத்துக்காரர். பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்த சத்யஜித் ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’என்ற சிறுவர்களுக்கான மாதப் பத்திரிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்திவந்தார். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்திவந்தார். ரேவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவரது தந்தை இறந்துவிட பத்திரிகையும் நின்றுவிடுகிறது. ரேயின் பள்ளிப் பருவத்தில் ‘சந்தேஷ்’ பத்திரிகையின் பழைய ஃபைல் பிரதிகளைக் காட்டுகிறார் அவரது அம்மா.தாத்தாவின் எழுத்துக்கள் வழியே இந்திய இதிகாசங்களில் நிறைந்திருக்கும் மாயாஜாலத் தன்மையும், தனது தந்தை சுகுமார் ரேயின் படைப்புலகமும் அவரைக் கவர்ந்துவிடுகின்றன. தனது தந்தையின் ஓவியத்திறன் அளித்த உந்துதலில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலையை முறையாகப் பயின்று முடிக்கிறார்.
மீண்டும் சந்தேஷ்
இயக்குநராக சத்யஜித் ரே புகழ்பெற்ற பிறகு தனது குடும்பத்தின் அறிவுச் சொத்தான ‘சந்தேஷ்’ பத்திரிகையை 1961-ல் திரும்பவும் கொண்டுவருகிறார். பத்திரிகைக்கான தனது முதல் கதையை எழுதி, அதற்கு ஓவியமும் வரைந்த ரே, பிறகு ‘சந்தேஷ்’ பத்திரிகை அடுத்து வந்த 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் 1986-வரை இடைவிடாமல் எழுதிவந்திருக்கிறார்.
சாகச எழுத்து
சந்தேஷில் ரே எழுதிய கதைகள் அனைத்தும், துப்பறிதலையும் சாகசங்களையும் மையமாகக் கொண்டவை. ‘இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ்’ என்று புகழப்படும் அவரது 'ஃபெலுடா' கதாபாத்திரத்தின் துப்பறியும் சாகசங்களை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ‘பெலுடா’ கதைகளைத் தாண்டியும் ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார் ரே.
அப்படிப்பட்ட 11 கதைகளை எஸ். அற்புதராஜின் இலகுவான மொழிபெயர் ப்பில் ‘சத்யஜித் ரே கதைகள்’ என்ற தலைப்பில் மலைகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் ஒரு கதையைத் தவிர்த்து அனைத்தும் விநோதக் கற்பனைகளில் சஞ்சரிப்பவை. பறக்கும் மனிதர்கள், புராண காலத்துப் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை நிகழ்காலத்தின் கதைக் களத்துக்குள் உலவவிடுகிறார் ரே. அவரது ‘பெலூடா’ என்ற மாபெரும் துப்பறிவாளரைப் போல ‘ஜடாயு’என்ற துப்பறியும் எழுத்தாளர் இந்த கதைகளில் இணைந்துகொள்கிறார்.
‘படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம்’ கதை மட்டும் நவீனப் புனைவு. 65-வயது மதிக்கத் தக்க ஒரு முன்னாள் நாடக நடிகருக்கு தற்கால சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்போல ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வருகிறது. கதாநாயகன் நடந்துசெல்லும் சாலையில், ஒரு பாதசாரியாக நாளிதழைப் படித்தபடி அவனது தலையில் தற்செயலாக மோதிவிட்டு வலியால் ‘ஆ…’ என்று முனக வேண்டிய கதாபாத்திரம். அதை அர்ப்பணிப்புணர்வுடன் நடித்துக்கொடுத்துவிட்டு அதற்கான ஊதியத்தை வாங்காமல் அவர் அங்கிருந்து மறைந்துசென்றுவிடும் கதை அது. இந்தியத் திரைப்படங்கள் குறித்த கேலிகள், நிதர்சனம் போன்றவற்றை இக்கதையின் மறைபொருளாக ரே வைத்திருக்கிறார்.
பம்பாயில் கதைகள் தயாரிக்கப்படுகின்றன, கல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்றார் ரே. கொல்கத்தாவில் உருவான இந்தக் கதைகள் தமிழகத்தால் ரசிக்கப்படுவதற்காக இப்போது தமிழில் வெளிவந்திருக்கின்றன.
-ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in
சத்தியஜித் ரே கதைகள்
தமிழில்: எஸ். அற்புதராஜ்
விலை: ரூ. 300
வெளியீடு: மலைகள் பதிப்பகம், அம்மாபேட்டை, சேலம் 636003
தொடர்புக்கு: 8925554467