இலக்கியம்

நான் எப்படி படிக்கிறேன்? - சசி, திரைப்பட இயக்குநர்

மு.முருகேஷ்

எல்லோருக்கும் ஒரு தீபாவளின்னா திரைத்துறையில் இருக்கிறவங்களுக்கு இரண்டு தீபாவளின்னுதான் நான் எப்பவுமே நினைப்பேன். திரைப்பட விழா ஒரு தீபாவளின்னா, சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இரண்டாவது தீபாவளி.

நான் சென்னைக்கு வந்த இந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென்றாலே எனக்குள் புது உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இப்போதெல்லாம் என் மகளும் எப்ப புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என்று கேட்பது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. குறைந்தது மூன்று நாட்களாவது புத்தகக் கண்காட்சிக்குச் சென்று, எனக்குப் பிடித்த நூல்களை அள்ளிக்கொண்டு வருவேன்.

புத்தகக் கண்காட்சியில் மக்களைக் கூட்டமாகப் பார்க்கும்போது, இந்த உலகமே அழகாக இருப்பது மாதிரி எனக்குத் தோன்றும். புத்தகம் வாங்கிப் போவோர் கைகளில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூல்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்க்கும் பழக்கம் இன்னமும் எனக்கு இருக்கிறது.

வண்ணதாசனின் புத்தகமொன்று எல்லா வீட்டிலும் இருந்துவிட்டால்,இந்த உலகில் பிரச்சினை என்பதே இருக்காதே என்பதாக எண்ணிக்கொள்வேன். அ.முத்துலிங்கம், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், பூமணி, ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

லா.சா.ரா.வின் எழுத்துக்களை என்னால் படித்து உள்வாங்கிக்கொள்ள முடிகிறது என்பதேகூட, என்னைச் சற்றே மேம்பட்டவனாக கர்வம் கொள்ளத் தூண்டுகிறது.

ஏதாவது கவிதையோ, ஏதாவதொரு புத்தகத்தின் ஒரு வரியோ பத்திரிகைகளில் படித்து, அது பிடித்திருந்தால் உடனே குறித்துவைத்துக் கொள்வேன். அந்தப் புத்தகம் என் தேடுதலில் கூடுதலாய்ச் சேர்ந்துகொள்ளும். கதை, கவிதை, நாவல் எனப் பல நூல்களை வாசித்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது எப்போதுமே கவிதைதான். எப்போதோ வாசித்த தேவதச்சனின், ‘ஒவ்வொரு துளிக்குள்ளும் / உறங்கிக் கிடக்கிறது / ஓராயிரம் துளிகள்...’ எனும் கவிதை வரிகள் நெடுநாட்கள் என்னை ஏதேதோ யோசனைகளில் மூழ்கவைத்தன.

சமீபத்தில், இயக்குநர் மிஷ்கின் எழுதிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையாக்கமும் திரைக்கதையும்’ எனும் நூலை வாசித்தேன். ஒரு கதை எப்படித் திரைக்கதை வடிவம் பெறுகிறது, திரைக்கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் என்ன வகை ஆடை அணிய வேண்டும், காட்சி எப்படி அமைக்க வேண்டும், அந்தக் காட்சியில் என்னென்ன பொருட்கள் இடம்பெற வேண்டும் என்பதை மிகவும் நேர்த்தியோடும் மிகுந்த கலை நுட்பத்துடனும் மிஷ்கின் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஒரு இயக்குநர் சினிமாவை எவ்விதம் அணுக வேண்டுமென்பதை ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல எளிமையாய், தெளிவாய் பதிவு செய்துள்ளார் மிஷ்கின். சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது.

புத்தக வாசிப்பின் வழியே நான் பெற்ற அனுபவத்தை, திரைப்படத்தின் வழியாகக் கடத்தும்போது அது மிகப் பெரிய மன மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது. புத்தகம் வாசிக்கிற பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் போயிருந்தால், நான் இவ்வளவு சந்தோஷத்தோடு இன்றைக்கு இருந்திருப்பேன் என்று என்னால் சொல்லவே முடியாது.

நாம் வாழும் உலகத்தைப் புரிந்துகொள்ளவும், மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் நமக்கு வழிகாட்டுபவை புத்தகங்கள்தான். வழக்கமாய் நாம் உலகத்தைப் பார்ப்பதிலிருந்து, வேறு விதமாய் இந்த உலகத்தைப் பார்க்கத் தூண்டுபவை புத்தகங்கள்.

உனக்கு என்ன நடக்கிறது என்பதல்ல; உனக்கு அது நடக்கும்போது அதை நீ எப்படி எதிர்கொள்கிறாய் என்பதைக் கற்றுத்தரும் சக்தி படைத்தவை நாம் வாசிக்கிற புத்தகங்கள்தான்.

SCROLL FOR NEXT