தஞ்சை மாவட்ட மக்களின் விவசாய வாழ்வையும், அவர்கள் மண்ணின்மீது கொண்டுள்ள அளப்பரிய நேசத்தையும் தன் படைப்புகளில் பதிவுசெய்யும் சோலை சுந்தரபெருமாள் எழுதியிருக்கும் பத்தாவது நாவல் இது.
‘பால்கட்டு’ நாவலில் நிலவுடைமைச் சமூகத்தின் சரிவைச் சுட்டியவர், அதன் நீட்சியாக இன்றைக்கு விவசாயமென்பது கார்ப்பரேட் மயமாகிவருவதை இதில் பதிந்துள்ளார். சமூகத்தில் நிகழும் எந்த மாற்றம் குறித்தும் கவலை கொள்ளாத மனித மனங்களைக் கேள்விகளால் உலுக்கியெடுக்கிறாள் இந்த ‘எல்லை பிடாரி’. பெரியகுஞ்சான் என்கிற கிராமத்து சம்சாரியின் வழியாக, இன்றைய விவசாய குடும்பங்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் குறுக்குவெட்டாகப் பார்க்க வைத்துள்ளார் சோலை சுந்தரபெருமாள். சரளமான வட்டார மொழியில் நீரோடைபோல் சலசலத்தபடி ஓடுகிறது நாவலின் நெகிழ்ந்த மொழிநடை.
- மு.மு.