விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
‘கி.ரா. விருது’க்கு இந்த ஆண்டு அ.முத்துலிங்கம் (85) தேர்வுசெய்யப் பட்டிருக்கிறார். இதற்கு முன்பு கண்மணி குணசேகரன், கோணங்கி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. ‘சக்தி மசாலா’ நிறுவனர்களான துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் இந்த விருதை வழங்குகிறார்கள்.
இந்த விருது ரூ.5 லட்சத்தை உள்ளடக்கியது. இலங்கையில் பிறந்த அ.முத்துலிங்கம் உலக வங்கி, ஐ.நா.வின் சேவைத் திட்ட அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று இதுவரை 20-க்கும் மேற்பட்ட நூல்களை அ.முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனரான அ.முத்துலிங்கம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு பன்னாட்டுத் தன்மையைக் கொடுத்திருக்கும் அ.முத்துலிங்கத்துக்கு வாழ்த்துகள்!
கலைஞர் புத்தகக்காட்சி: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் சிறப்புப் புத்தகக்காட்சி நேற்று (ஜூன் 3) தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி ஜூன் 13 வரை நடைபெறவிருக்கிறது. 19 அரங்குகள், 98 ஆயிரம் தலைப்புகள், பிரபலங்களின் உரைகள் என்று களைகட்டும் புத்தகக்காட்சி இது. மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் இந்தப் புத்தகக்காட்சியில் கிடைக்கும். ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களும் 10% தள்ளு படியில் கிடைக்கின்றன. இடம்: பேரறிஞர் அண்ணா பூங்கா. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.