நாடக நடிகையான சுசிலா லோட்லிகர் எனப்படும் வந்தனா மிஸ்ரா, ‘ஐ, தி சால்ட் டால்’ என்னும் சுயசரிதையை எழுதியுள்ளார். இதில் மும்பை நகர் பற்றிய தன் பால்யகால நினைவுகளை ருசிகரமாக விவரித்துள்ளார். வளரிளம் வயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட நேர்ந்தது. வருமானத்துக்காக 1940-ல் நாடக நடிகையானவர் இவர். குடும்ப சூழ்நிலை காரணமாக நடிகையானாலும் விரைவிலேயே குஜராத்தி மற்றும் மார்வாடி நாடக உலகில் புகழ்பெற்றார்.
21 வயதில் தனது தாயின் ஆலோசனையின் பேரில் நாடக உலகை விட்டு நீங்கிய வந்தனா, நடிகரும் எழுத்தாளருமான பண்டிட் ஜெதியோ மிஸ்ராவை மணந்துகொண்டார். அப்படியே அவர் குடும்ப வாழ்விலேயே மூழ்கிவிடவில்லை, 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாடக உலகத்துக்குத் திரும்பி குணச்சித்திர நடிகையாகப் பெரும் புகழ்பெற்றார். தனது சுயசரிதையில் சுதந்திரத்துக்கு முந்தைய பம்பாய் நகரம் குறித்துப் பல சித்திரங்களையும் பதிவுகளையும் தந்துள்ளார். 1960கள் வரை பம்பாய் நகரம் உழைப்பாளிகளின் சொர்க்கமாக இருந்ததென்று கூறும் அவர், கைநிறைய வேலை செய்தால் வயிறு நிறைய உணவு கிடைக்கும் இடமாக மும்பை இருந்தது என்று குறிப்பிடுகிறார். எப்படியான வாழ்க்கை கிடைத்ததோ அந்த வாழ்க்கையில் மிகவும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அனுசரணையுடனும் மக்கள் வாழ்ந்ததாக நினைவுகூர்கிறார். 1960க்குப் பிறகான ஐம்பது வருடங்கள் முழுமையாகக் கொள்ளையும் சூறையாடலும்தான் என்கிறார். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிக் கூறும்போது, ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் நாங்கள் சுதந்திரத்துக்கான முழக்கமெல்லாம் எழுப்பவில்லை என்று கிண்டலாகக் கூறும் அவர், நமது வேலை நன்றாக இருக்கும் வரையில் நாமும் நன்றாக இருக்கலாம் என்பதே மும்பை நகரத்தில் வசிப்பவர்களின் தத்துவம் என்கிறார். அக்காலகட்டத்தில் வெங்காயம் ஒரு ராத்தலின் விலை இரண்டணாக்கள். உருளைக்கிழங்கு மூன்றணாக்கள். தேங்காய் மூன்று பைசா. ஒரு ராத்தல் ஆட்டிறைச்சி ஒன்பது அணா.