திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் நாறும்பூநாதசுவாமி கோயில் ஆயிரத்துநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ராஜகோபுரத்து ஐந்து தளங்களின் உட்புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுவரோவியங்களால் திருப்புடைமருதூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமாக அறியப்படுகிறது. இந்த ஓவியங்கள் பற்றிப் பல ஆண்டுகளாக ஆய்வுசெய்து ‘சித்திரக்கூடம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் சென்னை கிறித்துவக் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் சா. பாலுசாமி.
திருப்புடைமருதூர் கோயிலின் அனைத்து வண்ணச் சுவரோவியங்களும் அதற்கான விளக்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூலுக்கான அறிமுகச் சிற்றேடு வெளியீட்டுக் கூட்டம் சமீபத்தில் சென்னை மேக்ஸ்முல்லர் பவனில் நடைபெற்றது.
இக்கோயிலின் இரண்டாம் தளத்தில் அமைந் திருக்கும் சுவரோவியங்கள் தாமிரபரணிப் போரைக் குறிப்பிடுகின்றன என்று 2011-ல் கண்டுபிடித்துச் சொன்னார் பேராசிரியர் சா.பாலுசாமி. அதுவரை, இரண்டாம் தளத்தில் இருந்த ஓவியங்கள் எந்தப் போரைக் குறிப்பிடுகின்றன, எதற்காக அந்தப் போர் நடைபெற்றது என்ற குழப்பத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் இருந்தனர். “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்தப் போரின் காட்சிகள் இக்கோயிலின் இரண்டாம் தளத்தில் விரிவாகத் தீட்டப்பட்டுள்ளன. அந்தக் கால அரசாங்க நடவடிக்கைகளை இந்தச் சுவரோவியங்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. 16-ம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றுக்குத் திருப்புடைமருதூர் ஓவியங்கள் இன்றளவும் முக்கியமான சாட்சிகளாக விளங்குகின்றன” என்கிறார் பாலுசாமி.
இக்கோயிலின் ஓவியங்கள் அனைத்தும் விஜயநகர ஓவிய பாணியையும், நாயக்கர்களின் ஓவிய பாணியையும் இணைத்து ‘வேணாட்டுப் பாணி’ என்று அழைக்கப்படும் புதிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் ஐந்து தளங்களிலும் புராணக் கதைகளும், வரலாற்று நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மகாபாரதத்தின் கிராதார்ஜுனீயம் (வேடன் உருவில் வந்த சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போரைப் பற்றிய பதிவு), இராமாயணப் போர், பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் போன்றவை இந்தச் சுவரோவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் சேர நாட்டின் சிறப்பான இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளன.
இந்த அறிமுகச் சிற்றேடு வெளியீடு கூட்டத்தில் பேசிய ஓவியர் டிராட்ஸ்கி மருது, “மதுரை பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி அமைந்திருந்த நாயக்கர் காலத்து சுவரோவியங்கள் பதினெட்டு வயதிலிருந்தே எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், இப்போது அந்த ஓவியங்கள் இல்லை. இந்தமாதிரி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்ப் பதிப்புலகம் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் படிமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புத்தகங்களை வெளியிட வேண்டும்” என்றார்.
தடாகம் பதிப்பகம் வெளியிடும் ‘சித்திரக்கூடம் - திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ என்ற இந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.