‘தலித் வரலாற்று மாதம்’ என்கிற கருத்தாக்கத்துடன் பல்வேறு நிகழ்வுகளை ஏப்ரல் மாதம் முழுவதும் நடத்தி வருகிறார் இயக்குநர் பா.இரஞ்சித். அவர், தன்னுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பில், கலைத் திருவிழா, ஓவியக் கண்காட்சி, திரைப்பட விழா, ஒளிப்படக் கண்காட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்திருந்தார்.
தற்போது அவற்றின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் தலித் எழுத்தாளர்களுக்கான, ‘தலித் இலக்கியகூடுகை’ நிகழ்வு, மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தொடக்க உரையாற்றியனார் பா.இரஞ்சித்.
அவர் பேசும்போது, “தலித் எழுத்துக்கள் தான் என் திரைப் பயணத்தின் தொடக்கம். உலகளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் இலக்கியத்தில் பதிவாகி இருக்கின்றன. அவற்றை வாசித்தபோது அவற்றுடன் என்னையும் என் வாழ்க்கையையும் எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
வரலாற்று ரீதியாக தலித் மக்களின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் வாழ்வியல் முழுக்க முழக்க கலையோடு பின்னிப்பிணைந்தது. இலக்கியத்தின் வழியாக தலித் வாழ்க்கையைப் பதிவு செய்த, அழகிய பெரியவன், இமயம் உள்ளிட்ட எழுத்தாளர்களே எங்களின் வேர்ச்சொல்.
90-களில் தலித் இலக்கியம் என்ற வகைமை தோன்றியபோது பல கேள்விகள் எழுந்தன. இப்பொது தலித் இலக்கியம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியுள்ளது. அந்த வகைமையைச் சுய மதிப்பீடு செய்ய இந்த இலக்கியக் கூடுகை உதவும். முன்னெப்போதும் இல்லாத தலித் இலக்கியம், பவுத்தம் குறித்த ஆய்வுகள் தற்போது அதிகமாக நடைபெற துவங்கியுள்ளன. தலித் இலக்கியத்தின் எதிர்மறை அம்சங்களை பற்றி மட்டும் பேசாமல் நேர்மறை அம்சங்களை அதன் நேர்த்தியைக் குறித்து பேசுவதே இக்கூடுகையின் நோக்கம்.” என்றார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பா.இரஞ்சித். அப்போது அவர் “கலையும் இலக்கியமும் அரசியலுக்கான முக்கிய வடிவம். எனவே அவற்றை வளர்த்தெடுக்கும் வகையில் ‘வானம் கலைத் திருவிழா’வை நடத்தி வருகிறோம். இலக்கியச் சூழலுக்கும் பொது மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. வெகு மக்கள் இலக்கியத்தை கொண்டாடுவதில்லை. ஆனால், இன்று படைப்பிலக்கியம் வாசிக்கும் இளையோர் அதிகரித்து வருகின்றனர்.
ஐரோப்பிய, ஆப்ரிக்க, அரபி இலக்கியங்களை கொண்டாடும் அளவுக்கு, தமிழ் இலக்கியமும், அதன் முக்கிய பகுதியாக இருக்கும் தலித் இலக்கியமும் கொண்டாடப்பட வேண்டும். இந்தியாவில் இந்தி, ஆதிக்க மொழியாக இருக்கிறது. நம்மைவிட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம், வட இந்தியர்களுக்கு இருக்கிறது. எனவே, இந்தியை எப்போதும் இங்கே ஏற்கமாட்டோம். இந்தியாவில் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தென்னிந்திய மக்கள், திராவிடர்களாக ஒன்று சேர்ந்து நின்றால்தான் தேசிய அளவில் நமக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டார்.