தமிழின் மிக முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான கலாப்ரியாவுக்கு (வயது 72) தமிழரசி அறக்கட்டளை-ஜேஎம்பி குரூப் இணைந்து வழங்கும் ‘ஸீரோ டிகிரி வாழ்நாள் சாதனையாளர் விருது-2022’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ரூபாய் ஒன்றரை லட்சத்தை உள்ளடக்கியது. கடந்த ஆண்டு இந்த விருது பேராசிரியர் அ.மார்க்ஸுக்கு வழங்கப்பட்டது. கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை என்று பல வகைமைகளில் 40-க்கும் மேற்பட்ட நூல்களை கலாப்ரியா இதுவரை வெளியிட்டிருக்கிறார். அவருடைய கவிதைகள் பெரிய அசைவையும் அவருக்குப் பின் எழுத வந்தவர்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவை. கலாப்ரியாவுக்கு வாழ்த்துகள்!
முப்பெரும் விழா!
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணையும் விழா, மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, உலக புத்தக தின புத்தகக்காட்சி தொடக்க விழா என்று முப்பெரும் விழா ஒன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (நியு காலேஜ் எதிரில்) இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு, தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இந்த விழாவை இணைந்து நடத்துகின்றன. வனிதா பதிப்பகத்தின் பெ.மயிலலேவன், மாவட்ட நூலக அலுவலர் த.இளங்கோ சந்திரகுமார், வே.தணிகாசலம், த.சுவர்ணலதா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள்.