பத்மாவின் ஆத்மார்த்த உணவு
நடிகை, சர்வதேச மாடல் மற்றும் பிரபல தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி நடத்துபவர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர் பத்மாலக்ஷ்மி. இவர் எழுதிய சுயசரிதைதான் தற்போதைய ஆங்கிலப் பதிப்புலகில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ‘லவ், லாஸ் அண்ட் வாட் வீ ஏட்’ என்ற இந்த சுயசரிதையில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடான தனது திருமண உறவையும், அதில் அடைந்த கசப்புகளையும் பிரிவையும் பற்றி வெளிப்படையாக எழுதியுள்ளார். சென்னையில் தனது குழந்தைப்பருவத்தைக் கழித்த பத்மாலக்ஷ்மி சென்னை தொடர்பான அருமையான நினைவுகளை இப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். மாடல் ஆவதற்காக மிலன் நகரில் பட்ட சிரமங்களையும், தனது வாழ்வில் வந்த ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகவும் சிக்கலானதாகவும் அதேவேளையில் ஆத்மசுத்தியாகவும் இருந்தது என்று
‘தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த தனது நேர்காணலில் கூறியுள்ளார். உலகத்தின் எத்தனையோ உணவுகளைச் சுவைத்திருக்கும் பத்மாலக்ஷ்மியின் நியூயார்க் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை யாரும் போனால் கிச்சடி அவசியம் இருக்கும். அத்துடன் தனது ஆத்மார்த்தமான உணவு தயிர் சாதம் என்கிறார் பத்மா.
ஏமாந்துபோகும் இந்தியா
இந்தியா டுடே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் களில் எழுதிய கட்டுரைகள் மூலம் 40 ஆண்டு களுக்கும் மேலாக நாடறிந்த பத்திரிகையாளராக இருப்பவர் தவ்லீன் சிங். அவருடைய பல கட்டுரைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கெனவே, காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி ‘காஷ்மீர்: ஏ டிராஜடி ஆஃப் எரர்ஸ்’, இந்தியாவின் தலைமையகமான டெல்லி எப்படிச் செயல்படுகிறது என்று ‘தர்பார்’ ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய சமீபத்திய புத்தகம் ‘இந்தியாவின் புரோக்கன் டிரைஸ்ட்’. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், இப்போதுவரை அது சுதந்திரத்துக்காக ஏங்கியே வருகிறது. இந்திய அரசுக்கும், இந்திய சுதந்திரத்துக்கும் இடையிலான போரில் எப்போதும் இந்திய அரசே வெற்றி பெற்று, மக்கள் முக்கியத்துவம் இழந்துவருவது பற்றி இந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் பெரும் நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் தனது தலைவர்களை இந்தியா தேர்ந்தெடுக்கிறது. ஆனால், கடைசியில் மிக மோசமாக எப்படி ஏமாந்து போகிறது என்று இப்புத்தகம் பேசுகிறது.