மிகவும் குரூரமானவர்களைத் தவிர சட்டென்று வேறு யாருக்கும் கொலை ஒரு தீர்வு என்று தோன்றாது. எனக்கு இப்போது 85 வயது ஆகிறது. நான் ஒரு கொலையையும் பார்த்ததில்லை. ஏராளமான விபத்துக் கள் பார்த்திருக்கிறேன். எனக்கே சில தரு ணங்களில் தற்கொலை தோன்றியிருக் கிறது. பிறகு யோசித்தபோது எவ்வளவு அற்ப காரணங்கள் என்றும் தோன்றியிருக்கிறது.
சாவர்க்கர் பதிமூன்று ஆண்டுகள் கைகால் விலங்கிட்டு அந்தமான் சிறையில் தரையில் கிடந்திருக்கிறார். அவருக்கு எவ்வளவோ கொடுமைகள் இழைக்கப்பட்டும் உயிர் பிழைத்து நாட் டுக்கு நல்ல காலம் வருவதைப் பார்த் திடுவோம் என்று உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்திருக்கிறார். தெய்வ நம் பிக்கை உள்ளவர்கள் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணியிருக்கக் கூடும். சாவர்க்கர் அவருடைய சங்கிலி களைக் கொண்டே உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம். இல்லை. ‘இனிமேல் அரசியலில் ஈடுபடமாட்டேன்’ என்று உறுதிமொழி கொடுத்து வெளியே வந்தவர் சமூக சேவையில் ஈடுபட்டார். இந்திரா காந்தி காலத்தில் எடுத்து வெளியிடப்பட்ட ஆவணப்படம்தான் எனக்கு இதையெல்லாம் தெரிவித்தது.
நான் சென்னையில் 1952-ல் குடியேறி னேன். அந்நாள் வரை மிகப் பெரிய கொலை நிகழ்ச்சி லக்ஷ்மிகாந்தனுடையது. லக்ஷ்மிகாந்தன் இன்றைய மொழி வழக்கில் சொல்லவேண்டுமானால் அவர் ஒரு நகர ரவுடியாக இருந்திருக்கிறார். சென்னை வருவதற்கு முன்பு அந்தமான் சிறையில் இருந்திருக்கிறார். ஜப்பான் அந்தமானைக் கைப்பற்றிய பிறகு சென்னை வந்த அவர், தமிழ ருக்கு ஒரு புதிய ‘பிழைக்கும் வழி’ அறிமுகப்படுத்தினார்.
பிரபல மனிதர்களின் வண்டி யோட்டுவோரை அறிமுகம் செய்து கொண்டு, “உங்கள் வண்டி கென்னெட் சந்தில் பகல் ஒரு மணிக்கு நின்றது” என்று தலைப்புப் போடுவார். (அதற்கென்று ஒரு பத்திரிகை தொடங் கினார்.) விஷயம் புரியாதபடி பலர் பயந்துபோய்விட்டார்கள். இந்த மாதிரி ‘பிளாக்மெயில்’ பத்திரிகைகள் நன்கு வளர்ந்த நாடுகளிலும் இருந்திருக் கின்றன. விரைவிலேயே இந்தப் போக்கு சட்டரீதியாகச் சந்திக்கப்பட்டது. தமிழ் நாட்டில் இன்று இப்படி ஏதாவது அச்சில் வந்தால் அதை யாரும் சட்டை செய்வதில்லை. ஆனால் வம்புக்கு என்று காத்திருப்பவர்களுக்கு இச்செய்திகள் வாய்க்கு மெல்ல அவல்.
நான் சென்னை வந்து இரண்டு ஆண்டு களுக்குள் ஒரு கொலை வழக்கு. ஒரு பேனாக் கடை ஊழியரைக் காணோம். கடற்கரையில் ஒரு மூட்டையில் ஓர் ஆண் உடல். பெயர் ஆளவந்தார். அவருடைய நடத்தை சுகமில்லை. ஆனால் கொலை செய்யப்படுவதற்கு இது காரணமா?
விசாரித்ததில் அந்த மனிதன் தேவகி என்ற பெண்ணை வற்புறுத்தியிருக் கிறான். அவள் கணவனிடம் கூறியிருக் கிறாள். அவன் ஒரு சின்ன நிறுவனத் தில் விற்பனையாளன். கணவன் மனைவி யாக ஒரு வீட்டில் ஒரு பகுதியில் வசித் திருக்கிறார்கள். “அவனை வீட்டுக்கு வரச் சொல்லு,” என்று கணவன் கூறியிருக்கிறான். கிளர்ச்சியுடன் போன ஆளவந்தாருக்கு மரணம் காத்திருந்தது. அவன் கொலை தெரியாமலே போயிருக்கும். ஆனால் தேவகி வீட்டுக் குளியலறையில் சிறிது ரத்தக் கறை இருந்திருக்கிறது. உண்மையில் இது திட்டமிட்ட கொலை. ஆனால் நீதிபதி பல விஷயங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தீர்ப்பு அளித்திருக்கிறார். தேவகிக்கு இரண்டாண்டு சிறை. கணவனுக்கு ஏழு ஆண்டுகள்.
எனக்கு இன்றும் புரியவில்லை. ஒரு பேனாக் கடையில் இருப்பவனுக்குப் பெண்களை வற்புறுத்துவதெல்லாம் சாத்தியமாக இருந்திருக்கிறது! அன் றைய பொருளாதார நிலையில் ஒருவர் ஒரு பேனாவை ஐந்து வருடங்களாவது வைத்திருப்பார். வருடத்துக்கு ஒரு முறை நிப் மாற்றுவார். ஒரு பெண் மலிவு விலைப் பேனா வாங்கப் போயிருப்பாள். அவளுக்கு இந்தப் பேனாக் கடை சென்றது சிறைவாசம் வாங்கித் தந்திருக்கிறது!
‘ஜெம் அண்ட் கம்பெனி’ என்ற கடை இன்றும் இருக்கிறது. அதற்குத் தி.நகரி லும் ஒரு கிளை இருக்கிறது. இப்போது பேனா வியாபாரம் இரண்டாமிடம்தான். எப்படிப் புத்தகக் கடைகளில் புத்தகம் கடைசி இடமோ, அதே போல இந்த தி.நகர் கடையிலும் பரிசுப் பொருட்கள் தான் முக்கிய விற்பனை. இந்தக் கடையில் இருந்து பிரிந்து ஒருவர் தி.நகர் பேருந்து நிலையம் அருகே ஒரு மாடிப் படிக்கு அடியில் குட்டிக் கடை வைத்தார். எந்த மாதிரிப் பேனா இருந்தாலும் அதற்கு ரீஃபில் போட்டுவிடுவார். நான் என் மகன்கள், அவர்களுடைய நண்பர்கள், என் உறவினர் எனப் பலருக்குப் பேனாக்கள் அவரிடம் வாங்கியிருக்கிறேன். ஒரு குறை இல்லை. என்னோடு அவரும் கிழவராகிவிட்டார். ஐந்து மகள்களை மணம் செய்து கொடுத்திருக்கிறார். ஆளவந்தார் வேலைக்கு இருந்த அதே இடத்தில்தான் இவரும் இருந்திருக்கிறார்.
எனக்குக் கொலைகள் பற்றி அதிகம் ஆர்வம் இல்லை. எனக்கு ஸ்டான்லி கார்ட்னர், செக்ஸ்டன் பிளேக் நாவல்கள் பிடிக்காது என்றே கூறலாம். இன்னும் ஒரு அகதா கிறிஸ்டி நாவல் படித்ததில்லை. ஆனால், நான் ஒரு கொலைகாரன் பற்றித் தகவல் தர வேண்டியிருந்திருக்கிறது.
நான் வேலைக்கிருந்த ஒரு சினிமா ஸ்டுடியோவில் ‘மனம் போல மாங்கல் யம்’ என்ற படத்தின் இந்தி வடிவத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ‘மனம் போல மாங்கல்யம்’ இரட்டை வேடப் படம். அதில் சஜ்ஜன் நடித்தார். சில இடங்களில் இரண்டு பேரையும் காட்ட வேண்டியிருக்கும். அதற்கு ஒருவர் ‘டூப்’ போட வேண்டி வரும். அப்போது இருவர் எப்போதும் சேர்ந்து வருவார்கள். ஒருவன் இந்தி நடிகர் சஜ்ஜன் போல இருப்பான். அவன் சஜ்ஜனுக்கு டூப் ஆனான்.
அந்த டூப் நடிகரின் பெயர் மறந்துவிட்டது. அவனுடன் வருபவன் பெயர் இந்திரகுமார். இருவருமே வட இந்தியக்காரர்கள். எப்படியோ தி.நகர் ஆந்திரா வங்கிக் கிளை அதிகாரியைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் சில லட்சங்களை ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கி வருவதை அறிந்துகொண்டு இந்த இரட்டையர் அவனை அவர்கள் அமர்த்தியிருந்த காரில் ஏற வைத்துவிட்டார்கள்.
அன்று கடும் மழை. அவன் திணறியிருக்கிறான். சாந்தோம் போவ தற்குள் அவனைக் கொலை செய்துவிட்டுப் பணத்தைப் பங்கு போட்டுக்கொண்டுவிட்டார்கள். வண்டியோட்டிக்கு ஒரு சிறு பங்கு. உடலை ஏதோ அத்துவானத்தில் எறிந்துவிட்டுச் சென்னை திரும்பினார் கள். இருவரும் பிரிந்துவிட்டார்கள். இந்திரகுமார் உத்தரப்பிரதேசத்தில் அவன் ஊரில் ஒரு சோடாக்கடை தொடங்கினான். தொடக்க விழாவுக்கு யாரைக் கூப்பிட்டிருந்தான், தெரியுமா? அப்போது தகவல் ஒலிபரப்பு மந்திரியாகப் பணியாற்றிய இந்திரா காந்தியை. சஜ்ஜனுடைய ‘டூப்’போனவன் போனவன்தான்.
ஆனால் வண்டி மாட்டிக் கொண்டது. டிரைவர் மாட்டிக்கொண்டான். இந்திர குமார் மாட்டிக் கொண்டான். இந்திர குமாருக்குத் ‘தூக்கு’ என்ற ஞாபகம். மற்றவர்களுக்குப் பல ஆண்டுகள் சிறை. சஜ்ஜனின் டூப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று இந்தியக் கொலைகாரர்களுக்குப் பாகிஸ்தான் முதல் புகலிடம் என்பார்கள். அங்கே அவன் யாருக்கு டூப் போட்டுக் கொண்டிருந்தானோ?
அவர்கள் புகைப்படங்கள் கொண்டு வந்து என்னை அடையாளம் கண்டு பிடிக்கச் சொன்னார்கள். அந்தத் தலைகளுக்குள் இவ்வளவு குரூரமா?
நாங்கள் சஜ்ஜன் வைத்து எடுத்த படம் படுதோல்வி. மூலப் படம் ஓடு ஓடுவென்று ஓடியது. ஜெமினி கணேசன் சாவித்திரியை மணக்க வழி செய்தது. சஜ்ஜன் ஒரு நல்ல நடிகர். ஆனால் நாங்கள் எடுத்த படத்தின் விளைவாக அவருடைய திரைப்பட வாழ்க்கையே போய்விட்டது.
- புன்னகை படரும்…