இலக்கியம்

நூல்நோக்கு: இளைஞர்களின் அவலக் குரல்

புவி

தமிழ்ப் பேராசிரியரும் மாநிலக் கல்லூரியின் முதல்வருமான கல்யாணராமன், தி.ஜானகிராமனின் ஆராதகர் என்றே அறியப்படுபவர். தி.ஜா. நூற்றாண்டு விழாவையொட்டி அவரது படைப்புலகம் குறித்த 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் பெருந்தொகுப்பான ‘ஜானகிராமம்’ அவரது சமீபத்திய பங்களிப்பு. கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலக் கல்லூரி வளாகத்தில் வாரந்தோறும் துறைவாரியாகக் கருத்தரங்குகளையும் சிறப்பு சொற்பொழிவுகளையும் ஒருங்கிணைத்துவருகிறார். இவர், கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும்கூட.

90-களின் தொடக்கத்தில் சுபமங்களா உள்ளிட்ட இதழ்களிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018-2019 ஆண்டுகளில் ‘பேசும் புதிய சக்தி’, ‘காலச்சுவடு’ உள்ளிட்ட இதழ்களிலும் அவர் எழுதிய 15 சிறுகதைகள் ‘விபரீத ராஜயோகம்’ என்ற தலைப்பில் தொகுப்பாகியுள்ளன.

பாத்திரங்களில் ஒன்று, தன்மை ஒருமையில் கதைசொல்வது கல்யாணராமன் பெரிதும் பின்பற்றும் எழுத்து உத்தியாக இருக்கிறது. அவரது சமீபத்திய கதைகள் மனித வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்த அகமும் புறமுமான விசாரணைகளாக இருக்கின்றன. எளிமையாகவும் நேரடியாகவும் கதைசொல்லும் முறையில் அமைந்த அவரது ஆரம்பக் காலத்துக் கதைகள் இன்றைய பொருளாதாரச் சூழலுக்கும் மிகச் சரியாகப் பொருந்திப்போகின்றன.

நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளே அக்கதைகளின் மைய இழை. இடைப்பட்ட காலத்தில், உலகமயம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெருந்தொற்றின் காரணமாக எழுந்திருக்கும் பொருளாதாரப் பாதிப்புகள் மீண்டும் அதே நிலையை நோக்கி இளைஞர்களைத் தள்ளியிருக்கின்றன.

முப்பதாண்டுகளுக்கு முன்பு பட்டதாரி இளைஞர்கள் அனுபவித்த வேலைவாய்ப்பின்மைச் சிக்கலை, இன்று தொழிற்கல்வி பயின்றோரும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். குடும்ப அமைப்புக்குள்ளும் வெளியிலும் அவர்கள் எதிர்கொள்ளும் அவமானங்களும் அனுதாபங்களும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் காலத்தின் சாட்சியங்களாக இலக்கியம் பதிவுசெய்துகொண்டே இருக்கிறது.

விபரீத ராஜ யோகம்
கல்யாணராமன்
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -
629 001
விலை: ரூ.200
தொடர்புக்கு:
91 4652 278525

SCROLL FOR NEXT