லக்ஷ்மி சென்னையில் பிறந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த பாபநாசத்தில் வளர்ந்தவர். ஆட்டிசக் குழந்தைகள் வளர்ப்புக்காக ‘எழுதாப்பயணம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கல்லூரிக் காலம் முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவரது முதல் நாவல் இது.
ஆய்வுகள் செய்து நூல்களை எழுதுவோர் தமிழில் அரிது. ராஜம் கிருஷ்ணன் போல் வெகு சிலரே நூலுக்காக ஆய்வை மேற்கொண்டவர்கள். லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் இந்த நாவல் தஞ்சை அரண்மனையை மராட்டியர், ஆங்கிலேயருக்குக் கட்டுப்பட்டு ஆண்ட காலத்தைச் சேர்ந்தது. அதற்கான ஆய்வை மேற்கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். தி.ஜா.வின் தஞ்சை வேறு. தஞ்சை ப்ரகாஷ் தன்னுடைய கதைகளில் சரபோஜி காலத்துத் தஞ்சையைக் கொண்டுவந்திருக்கிறார். என்றாலும், முழுநீள நாவல் என்ற வகையில் இந்தக் கதைக்களம் தமிழுக்குப் புதிது.
ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அவர்களுக்கு அடங்கியவர்களை பொம்மை ராஜாக்களாக மானியத்தைக் கொடுத்து அமர்த்தினார்கள். அரசாட்சி செய்பவர்களிடம் ஆங்கிலேயர்கள் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார்கள் என்பதை ‘The Last Mughal’, ‘The Last Queen’ போன்ற நூல்கள் விவரிக்கும். பொம்மை ராஜாக்கள், தங்கள் மூதாதையர் போலவே ஆடம்பரமாக, பெரிய அந்தப்புரம், கேளிக்கைகள் என்று எதுவும் குறையாமல் வாழ்ந்தார்கள்.
ஐந்து வயதில் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெற்ற பெண்ணை அற்பப் பணத்துக்காகத் தந்தையே விற்கிறார். கிழட்டு ராஜாவுடன் ஓரிரவைக் கழிக்க, ஒரு பெண்ணை வற்புறுத்தி அனுப்புகிறார்கள். ராஜா இறந்ததும் ராணி உடன்கட்டை ஏறுகிறாள். சதி மூன்று காரணங்களுக்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. முதலாவதாக, கணவனுடன் சேர்ந்து சொர்க்கத்துக்குச் செல்வதான நம்பிக்கை; இரண்டாவதாக, சதியைக் கடைப்பிடிக்காத ராணிகள் இழிவாக நடத்தப்படுவதும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தக் காரணத்தால் மகுடம் சில வேளைகளில் மறுக்கப்படுவதும்; கடைசியாக, போரில் தோற்று அரசன் இறந்தால், வென்றவர்களின் பாலியல் வல்லுறவுகளைத் தடுக்க.
நாவலுக்காக உழைக்க வேண்டும், ஆய்வுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் எப்போதுமே சராசரிக்கு மேற்பட்ட நாவலையே எழுதியிருக்கிறார்கள். நாமும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு உணர்வை ஏற்படுத்திய நாவல் இது. ஒரு உண்மைச் சம்பவத்தை அறிந்துகொண்டு, அதைப் புனைவாக்கும் எண்ணம் தோன்றிப் பின், புனைவுக்கான தரவுகளை லக்ஷ்மி சேகரித்திருக்கிறார். சதி என்னும் வழக்கம் அந்தக் காலத்தில் எப்படிப் புனிதமாகக் கருதப்பட்டது என்ற புரிதலை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் நாவலில் காட்சி அமைப்புகளை லக்ஷ்மி உருவாக்கியிருக்கிறார்.
எது இந்த நாவலை நல்ல நாவல்களில் ஒன்றாக ஆக்கியிருக்கிறது? என்னைப் பொறுத்தவரை முதலில் சொல்வது நாவலின் பின்புலத்துக்கான ஆய்வு. அதனை இன்னும் சிறப்பாக்கும், அடங்கிய தொனியில் ஆழமான விஷயங்களைச் சொல்லும் செழுமையான மொழி. அநாவசியமான சம்பவங்கள், தேவையற்ற காட்சியமைப்புகள் எதுவுமேயில்லை இந்த நாவலில். அடுத்தது, அரண்மனை சேடிப்பெண்களின் வாழ்க்கை, தெய்வப் பிறவியாகக் கருதப்படும் ராஜாவின் இன்னொரு முகம், விதியின் மேல் பழிபோட்டு நகர்த்தும் பெண்களின் வாழ்வு, எந்த அரசானாலும் எளியோருக்குத் துணைபோகாதது என்று பல நுட்பமான விஷயங்கள் நாவலில் அதிவேகமாகக் கடக்கின்றன. மனைவியை மீறி நடக்கும் விஷயங்களுக்கு அவள் பொறுப்பில்லை என்று 19-ம் நூற்றாண்டு இந்திய ஆண் நினைப்பது அதிநுட்பம். அடுத்த நாவலுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
- சரவணன் மாணிக்கவாசகம்,
இலக்கிய விமர்சகர்.
தொடர்புக்கு: sarakavivar@gmail.com
ஆனந்தவல்லி
லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை – 600 018.
விலை: ரூ.230.
தொடர்புக்கு: 044-24332424