பல்லடம் மாணிக்கம் - தமிழ் நூல் காப்பகம், விருத்தாசலம்
கல்விப் பின்னணி ஏதுமில்லாத சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். நகரத்திலிருந்து தள்ளியிருக்கும் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் பாடப் புத்தகம் தாண்டிய ஏனைய புத்தகங்களைப் பார்க்கவோ, படிக்கவோ வாய்ப்பேதும் அமையவில்லை. மணலில் எழுதியும், ஓலைச்சுவடிகள் மூலமாகவும்தான் நான் படித்தேன்.
திண்ணைப் பள்ளிப் படிப்பு முடிந்து, உயர்நிலைப்பள்ளியில் சேருவதற்கு நகரத்திற்கு வந்தபோதுதான் எனக்குப் புத்தகங்கள் அறிமுகமாயின. என் தமிழாசிரியர் சித்தர் பாடல்களையும், பாரதியாரின் பாடல்களையும் நடத்தியபோது, அவற்றைப் படிக்க வேண்டுமென்கிற ஆவல் எனக்குள் எழுந்தது.
பஞ்சாயத்துக் கட்டிடத்தில் சிறிய நூலகமொன்று இருந்தது. அதிலிருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஆரணி குப்புசாமி முதலியார் எழுதிய துப்பறியும் நாவல்களும், வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களும் எனது ஆரம்பகால வாசிப்பிற்குத் தீனி போட்டன. கல்கி, ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வ.வின் நூல்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். சங்க இலக்கிய நூல்களின்மேல் ஈடுபாடு ஏற்பட்டு, அவை எங்கு கிடைக்கும் என்பதையறிந்து தேடிப்போய் படித்தேன். மரபு சார்ந்த இலக்கிய நூல்களையும், தற்கால இலக்கிய நூல்களையும் சேர்ந்து வாசிப்பது என்பதையே நான் எப்போதும் செய்துவருகிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க வந்தேன். என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதோடு, உலகம் என்ன என்பதையும் நான் அங்குதான் உணர்ந்துகொண்டேன்.
தமிழ் நூல்களைச் சேகரித்து, அவற்றின் வழியே நம் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் இதுவரை ஒரு லட்சம் நூல்களைச் சேகரித்துள்ளேன். அது மட்டுமில்லாமல், நான் வாசிப்பதற்கென்று 20 ஆயிரம் நூல்களையும் சேர்த்து வைத்துள்ளேன்.
சமீபத்தில் பேராசிரியர் அருணன் எழுதி, வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள ‘கடவுளின் கதை’ ஐந்து தொகுதி களையும் படித்தேன். 1700-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூல் தொகுதிகள், மனிதன் மதத்திற்கும், கடவுளுக்கும் அடிமையான சமூக வரலாற்றை தக்க ஆவணங்களுடன் விளக்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட ஒரு இனம் மெல்ல மேலெழுந்து வரும்போது, கடவுள் எனும் பெயரால் அவர்கள் எப்படியெல்லாம் மீண்டும் புதை குழிக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதைப் படிக்கும் ஒவ்வொரு வருக்குள்ளும் ஆதங்கம் எழும் வண்ணம் எழுதியிருக்கிறார்.
அரசியல் வரலாறு, இலக்கியம், சமூகம், பண்பாடு, நாகரிகம் என அனைத்திலும் இரண்டறக் கலந்திருக்கும் மனித நம்பிக்கைகள் மீது ஆழமான கேள்விகளை நுட்பமாக எழுப்பியுள்ளார் அருணன். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சுயசிந்தனையைப் பெற வேண்டும் என்பதன் அவசியத்தையும் ஒவ்வொரு தொகுதியும் வலியுறுத்துவதாய் உள்ளது.
இன்றைக்கு உலகில் நிலைத்திருக்கும் முக்கிய மதங்களான யூதம், பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து ஆகிய மதங்கள் இந்த மண்ணில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளச் செய்த முயற்சிகள் பற்றியும், ஆட்சியாளர்களின் தலையீடுகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. கடவுள், மதம் பற்றிய கற்பிதங்கள் சரியான கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.
கண்ணுக்கே தெரியாத பாதையொன்றில் ஏதோ இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு இருட்டுக்குள் நடக்கும் மனிதர்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது இன்றைய அவசர-அவசியத் தேவை என்பதை உணர்ந்து எழுதப்பட்டுள்ள ஐந்து நூல்களும் மிகவும் பிடித்திருந்தன.
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி நிற்கும் இச்சூழலில், புத்தக வாசிப்பினால் என்ன நன்மை என்ற கேள்வி சிலரிடம் எழலாம். நாம் சுயமாய் சிந்திக்கவும், நம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவும் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம். வாசிப்பு இல்லாத மனிதன், தன் வாழ்வில் முன்னேற முடியாது. புத்தக வாசிப்பு ஒன்றே நம் வாழ்வை அர்த்தமுடையதாக்கும் என்பது என் வாழ்வில் நான் கண்டடைந்த உண்மையாகும்.