மனித சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்குத்தான் எத்தனை வடிவங்கள்? ஆசியா கண்டத்தின் தென்பகுதியில் அவை சாதிகளின் உருவமாக உள்ளன. உலகின் பல பகுதிகளுக்கும் சாதியைத் தூக்கிச் சுமந்துள்ளார்கள் மனிதர்கள்.
ஐ.நா.சபையும் அதன் மனித உரிமைக் கவுன்சிலும் சாதி வெறியும் சாதிப் பாகுபாடுகளும் இன வெறியும் இனப் பாகுபாடுகள் போல ஒழிக்கப்பட வேண்டிய மனித குலத்துக்கு எதிரான தீமைகள் எனத் தங்களது ஆவணங்களில் குறிப்பிடுகின்றன.
இங்கிலாந்து தனது குடிமக்களாக மாறிவிட்ட இந்திய வம்சாவளியினரிடையே உள்ள சாதிப் பாகுபாடுகளைத் தனது நாட்டின் சமத்துவச் சட்டத்துக்கு எதிரானதாகக் கருதுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது உறுப்பு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் கவனிக்கப்பட வேண்டிய சமூகத் தீமையாக சாதிப் பாகுபாடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என விவாதிக்கிறது.
புகைந்துகொண்டிருக்கும் சர்வதேச விவாதப்பொருள்தான் சாதிப் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொடுமைகளும். ஆனால் இவை பற்றிய விவரங்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்களோடு முடிந்துவிடுகின்றன. தமிழிலும் இவற்றைக் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் ஐநாவின் ஆவணங்களைத் தமிழாக்கி வெளியிட்டிருப்பது. எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கிருஷ்ணவேணி.
இவற்றில் இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் எவ்வாறு சாதியப் பாரபட்சங்கள் உள்ளன? அவற்றை ஒழிக்க என்ன செய்யலாம் என்ற விவாதம் கிடக்கிறது. ஜனநாயகவாதிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஆவணம்.
பணி மற்றும் பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டை (சாதி) ஒழிப்பதற்கான ஐ.நா சபையின் கோட்பாடுகளும் வழிகாட்டுதலும் இந்தியாவுக்கான ஆய்வு அறிக்கை
தொகுப்பாசிரியர்: டாக்டர் ஜெயஸ்ரீ பி.மங்குபாய்
தமிழாக்கம்: கிருஷ்ணவேணி.
வெளியீடு: சுவாதிகார் தேசிய தலித் மனித உரிமைக்கான பிரச்சாரம், நியூடெல்லி.
தொடர்புக்கு: 04147 - 250349