சி.முத்துகந்தனின் புதுமையான மொழிநடையே இந்நூலின் சிறப்பு. அனுபவங்களின் கூட்டு. பல நாட்கள் கண்ட, கேட்ட, உணர்ந்த உணர்வுகளை ஒன்றாக்கி உருப்போட்டு, அதை தன் மொழியாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஏழு தலைப்புகளில் அமைந்த பல்வேறு பொருண்மைகள். நூலின் வாசிப்பனுபவம் பிற நூல்களிலிருந்து வேறுபட்டதாய் அமைந்திருந்தது. காரணம் அதன் பகுப்பு முறையும் மொழி நடையுமாகும்.
வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் நடைபெறும் உரையாடல்கள் அருமை. மாணவர்கள் படைப்பாளர்களாக ஆகும்போது (கடவுளாகும்போது) உலகிலுள்ள அனைத்தையும் படைக்கிறார்கள் கடவுளைத் தவிர.
பயண அனுபவங்களின் பகிர்வில் பதிவு செய்யப்படாத எழுத்துக்களும் அனுபவங்களுமே மிகுதி என்பது ஆசிரியரின் கருத்து. வாழ்விலும் சரி கலை இலக்கிய அரசியல் சூழல்களிலும் சரி குட்டையைக் கலக்கி மீன் பிடிப்பது பலரின் வழக்கம். நூலாசிரியரின் மொழியில் சொல்வதென்றால்- "அறமா மடத்தனமா என இரண்டாங் கெட்டானாக யோசிப்பவர்கள் மட்டுமே கலை இலக்கிய அரசியல் சூழலில் குட்டையைக் கலக்கி ஜிலேபி பிடிக்கலாம்". இவ்வரிகளில் மீன் வகையைக் குறிப்பிட்டுப் பேசி உவமைப்படுத்துதல் புதுமை. இது போன்ற பல புதுமைகள் இந்நூலில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.
குறிப்பாகப் பல நுண்ணிய எள்ளல் நிறைந்த சொற்கள்/ வரிகள் நூலின் சிறப்பு.
அம்மனுக்குப் பொட்டு வைக்கும் கந்தசாமி தாத்தாவின் செயல் (அனுபவ முதிர்ச்சி) தற்கால நவீனத் தொழில்நுட்பத்துடன் தோற்றுப் போகிறது. இதுபோல் பல நிகழ்வுகள் திறன்பட பதிவுசெய்யப்பட்டுள்ளமையும் சிறப்பே. "மெய் உணர வா" , "வாசிப்பைத் தேடி அலைகிறது எழுத்து" என்னும் வரிகளின் ஊடாக சொல்லப்பட்ட ஆவணப்படத் தயாரிப்பு அனுபவம் இயல்புக்குப் புதுமை.
நாம் கடந்து போன, நம்மைக் கடந்து போன மனிதர்கள், அவர்களினூடாகப் பெற்ற அனுபவங்கள் என்பன 'இயல்பால் அறிவோமா'கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியரின் எழுத்து மொழி, சொற்களின் தேர்வு அவரது படைப்பாளுமையைத் தனியே அடையாளம் காட்டுகின்றன.
- லீமா மெட்டில்டா. அ
நூல்: இயல்பாய் அறிவோம்
ஆசிரியர்: சி.முத்துகந்தன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்