சென்னை புத்தகக்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அரங்கில் (எப் - 14), மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் புத்தகங்கள் கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கி.ராஜநாராயணன் தொகுத்த ‘கரிசல் கதைகள்’, ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’, ‘திருக்குறள்’ உள்ளிட்ட 12 நூல்கள் இங்கே மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றுடன், ‘திசைதோறும் திராவிடம்’ என்ற திட்டத்தின்கீழ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 6 தமிழ் இலக்கிய நூல்களும் விற்பனையில் உள்ளன.
வ.உ.சி.யின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட 1,020 பக்கங்கள் கொண்ட ‘பன்னூல் திரட்டு’, 725 பக்கங்கள் கொண்ட ‘திருக்குறள் உரை’ ஆகிய இரண்டு நூல்களும் வெறும் ரூ.600-க்கு இங்கே கிடைக்கின்றன. அறிஞர் பா.ரா.சுப்பிரமணியத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள, 1,500 பக்கங்களைக் கொண்ட கால்டுவெல்லின் ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூல் ரூ.1,200-க்குக் கிடைக்கிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் வளர்ச்சி, தமிழ் வரலாறு, இந்திய வரலாறு உள்ளிட்ட 874 தலைப்புகளில் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட அரிய நூல்கள் யுபிஎஸ்சி தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்குப் பயனளிப்பவையாக இருந்தன. அவற்றில் 635 நூல்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு மிகவும் குறைந்த விலையில் இந்த அரங்கில் கிடைக்கின்றன. கலைச்சொற்கள், உளவியல், தமிழ்ச் சுருக்கெழுத்து, புவியியல், பொறியியல் தொழில்நுட்பவியல், அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியியல், சமூகவியல், தத்துவம், நிலவியல், மனையியல், வகை நுண்கணிதம், உலக வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, வேதியியல், வேளாண்மை, இலக்கியம், உயிரியல், பொது விலங்கியல், மருத்துவம், வணிகவியல், ஐரோப்பிய வரலாறு, பன்னாட்டுப் பொருளாதாரம், உடலியங்கியல், உயர்கல்வி நுழைவுத்தேர்வு வினாக்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், கீழடி குறித்த நூல்கள் போன்றவை மிகவும் குறைந்த விலையில் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நூல்களை www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் rare book என்ற உட்தலைப்பின் வழி நுழைந்து ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.