முக்கியமான சமகால ஓவியர்களில் ஒருவர் வீரசந்தானம். ஓவியராக மட்டுமல்லாமல் தேசிய விருதுபெற்ற ஆடை வடிவமைப்பாளர், சமூகப் போராளி, நடிகர் என இவருக்குப் பன்முக அடையாளங்கள் இருக்கின்றன. இவரது அரை நூற்றாண்டு ஓவியப் பயணத்தைப் பின்னோக்கிப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது சென்னை தக்ஷிண் சித்ரா. ‘வீரசந்தானம் - பின்னோக்கில் ஓர் ஓவியக் காட்சி’ (A Retrospective Exhibition) என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில் இவருடைய அறுபது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வரிஜா ஆர்ட் கேலரியில் மார்ச் 19 அன்று தொடங்கிய இந்தக் காட்சி மே 31 வரை நடைபெறுகிறது.
ஓராண்டுக்கு மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வீரசந்தானம் சமீபத்தில்தான் அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறார். இந்தக் காட்சி அவருக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அவரது பேச்சில் அந்த உற்சாகம் தெரிகிறது. “மரபு சார்ந்த ஓவியங்களின் மூலமாகவே என் உணர்வுகளை, உள்ளெழுச்சிகளை ஆழமாக வெளிப்படுத்த முடிகிறது. அதனால், அது சம்பந்தமாகத் தொடர்ச்சியாக ஆய்வு செய்து என் ஓவியங்களை முன்னெடுத்துச் செல்கிறேன் . அதற்காகத் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சுற்றிவர இருக்கிறேன். மீண்டும் வரையத் தொடங்கவில்லையென்றால் உடல்நிலை தேற இன்னும் நாளாகியிருக்கும்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் வீர சந்தானம் .
இந்த ஓவியக் காட்சியில் வீரசந்தானம் கல்லூரி காலத்தில் வரைந்த ஓவியங்கள் முதல் சமீபத்தில் வரைந்த ஓவியங்கள் வரை இடம்பெற்றிருக்கின்றன. இவை எல்லாமே மரபு சார்ந்த கலைகளின் மீதான இவரது காதலைப் பெரிய அளவில் வெளிப்படுத்துகின்றன. தோற்பாவைக்கூத்து, தொன்மையான இசைக்கருவிகள், கோயில் சிற்பங்கள், ஓவியங்கள், நிகழ்த்து கலைகள் போன்றவை இவருடைய ஓவியங்களின் பேசுபொருள்களாக உள்ளன.
இவர் சமீபத்தில் வரைந்த ஓவியங்களில் இசைக் கருவிகளின் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. இந்த ஓவியங்களின் வண்ணங்களும், கோடுகளும் முன்பைவிட ஆழமானதாகவும், உறுதியானதாகவும் மாறியிருக்கின்றன. மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் போன்ற யாழிசைக் கருவிகளின் கம்பீரமான அழகை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. “யாழிசைக்கும் பாணர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் யாழ் கருவியை இசைத்துப் பரப்பிவந்தார்கள். யாழ்தேவிக்குக் கோயில் இருந்ததாகவும், பின்னாளில் அது காணக் கிடைக்காமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனவே அச்சில் இருந்த யாழ் ஓவியங்களை அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றில் தேடிப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை ஓவியங்களாக்கினேன். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோற்கருவியான பஞ்சமுக வாத்தியத்தையும் என் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறேன். தற்போது, பறையாட்டத்தின் பல கூறுகளை ஓவியங்களாக்க முயன்றுவருகிறேன்” என்கிறார் அவர்.
இசைக் கருவிகளைப் போலவே காமதேனு தலைப்பில் இடம்பெற்றிருந்த ஓவியங்களும், ஜல்லிக்கட்டு ஓவியமும் இந்தக் காட்சியின் முக்கிய அம்சங்கள். தேவைப்படும்போது இவரது தூரிகை அரசியல் பேசத் தயங்கியதே இல்லை. அப்படித்தான், ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து ஜல்லிக்கட்டு ஓவியத்தை வரைந்திருக்கிறார். “இந்தக் காமதேனு, புலிக்குட்டிக்குப் பால் கொடுக்கும் ஓவியம் தனிப்பட்ட முறையில் என் மனதுக்குப் பிடித்த ஓவியம். எந்தக் கலையாக இருந்தாலும் மானுட மேம்பாட்டுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதை நோக்கித்தான் என் பயணம்” என்கிறார் வீரசந்தானம்.
இந்த ஓவியக் காட்சியின் ஒரு பகுதியாக வீரசந்தானத்தின் கலைப் பயணத்தை அலசும் ஒரு புத்தகமும், ‘காமதேனு’ என்ற ஆவணப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தை ஓவியர் கீதா இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வீரசந்தானத்தின் வாழ்க்கைப் பயணத்தையும், அவரது பன்முக ஆளுமையையும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.
தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in