மலையாளத்தில் மாதொருபாகன்
மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளார் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல் அங்கு மிகப் பெரிய வாசக கவனத்தைப் பெற்றுள்ளது. ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், சில வாரங்களிலேயே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. ஏற்கனவே பெருமாள் முருகனின் நூல்கள் மலையாளத்தில் உரிய அனுமதி இல்லாமல் வெளியாகி விற்பனையாகியுள்ளன. ஆனால் இந்த நூல் ‘மாதொரு பாகன்’ நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் அனுமதி பெற்று டிசி புக்ஸ் வெளியீடாக வந்துள்ளது. அப்பு ஜேக்கப் ஜான் இதை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
வண்ணமயமான கபாடபுரம்
அயல்நாட்டு இணையதளங்களின் கலை நேர்த்தியுடன் தமிழ் இலக்கியத்துக்கான புதிய இணைய இதழாக வருகிறது கபாடபுரம். கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியக் கட்டுரைகள், சிறார் இலக்கியம், நாவல் பகுதி, உலக சினிமா கட்டுரைகள் எனப் பல அம்சங்களுடன் வெளிவருகிறது. சுப்பிரமணிய பாரதியில் இருந்து சுகுமாரன் வரை தமிழின் முன்னணிப் படைப்பாளர்கள் பலர் பங்களித்துவருகிறார்கள். இதுவரை இரு இதழ்கள் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியர் கே.என்.செந்தில். வடிவமைப்பாளர் சந்தோஷ்குமார் நாராயணன்.
காதலும் புரட்சியும்
உருதுக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர் ஃபயஸ் அகமது ஃபயஸ். இந்தியப் பிரிவினைக்குப் பின், பாகிஸ்தானில் வாழ்ந்துவந்த இவரின் கவிதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளன. ஆனால் இன்று வரையிலும், அவரின் வாழ்வும் பணியும் குறித்து முழுமையான, அதிகாரபூர்வமான புத்தகம் எதுவும் வெளிவந்ததில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியிருக்கிறது
‘லவ் அண்ட் ரெவல்யூஷன்: ஃபயஸ் அகமது ஃபயஸ், தி ஆத்தரைஸ்ட் பயோகிராஃபி' எனும் புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதியவர் கவிஞரின் பேரன், அலி மதீ ஹாஷ்மி.