இலக்கியம்

360 : தேவிபாரதிக்கு ‘தன்னறம் விருது’

செய்திப்பிரிவு

சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களுள் ஒருவரான தேவிபாரதிக்கு ‘தன்னறம்’ அமைப்பு விருது வழங்கியிருக்கிறது. இந்த விருது ரூ.1 லட்சத்தை உள்ளடக்கியது. மேலும், தேவிபாரதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து, விலையில்லாப் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த முறை யூமா வாசுகிக்கும் ‘தன்னறம்’ விருது கொடுக்கப்பட்டு, அவருடைய கவிதைகளும் இப்படி விலையில்லாப் பதிப்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘தன்னறம்’ விருது பெற்ற தேவிபாரதிக்கு வாழ்த்துகள்!

மலையாளத்தில் தமிழவன்

“80-களில் தமிழிலக்கியத்தின் போக்கைச் சலனப்படுத்தியவர்களில் முக்கியமானவரான கோட்பாட்டாளர், எழுத்தாளர் தமிழவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலின் மொழிபெயர்ப்பு வரும் வாரம் முதல் மலையாள தினசரியில் பிரசுரமாக உள்ளது. அதற்கான அறிவிப்பு இது. ஏற்கெனவே, கன்னட தினசரியில் அந்நாவல் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாவல் தொடர்ந்து பதிப்புகள் காண்கின்றன. அந்த நாவலின் மொழிபெயர்ப்புக்கு மாநில சாகித்ய அகாடமி விருது பெற்றார் முனைவர் ஜெயலலிதா. தமிழவனின் மாணவனாகக் கூடுதல் மகிழ்ச்சி!”

- கவிஞர் றாம் சந்தோஷின் ஃபேஸ்புக் பதிவு

புத்தகக்காட்சி

வேளச்சேரி புத்தகக்காட்சி: ‘ஆயிரம் தலைப்புகள்... லட்சம் புத்தகங்கள்’ என்ற முழக்கத்துடன் சென்னை வேளச்சேரியில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய புத்தகக்காட்சி, பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: என்.எம்.எஸ். திருமண மாளிகை, தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம், வேளச்சேரி. நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884355516.

SCROLL FOR NEXT