இலக்கியம்

நூல் நோக்கு: மிட்டாய் பசி - ஃபுல் மீல்ஸ்

பா.அசோக்

எங்கோ தொடங்கி, எப்படி எப்படியோ பயணித்துச் செல்லும் எதார்த்தம் இல்லாத வாழ்வு இல்லாத மனிதர் யாருமில்லை. அதைப் போலக் காற்றில் அலைந்து, ஊசலாடி ஊசலாடி விழும் இடம் தெரியாமல் விழும் காய்ந்த சருகென்று இருக்கிறது ‘மிட்டாய் பசி’ நாவலின் கதை நகர்வு. மனிதம் மேலோங்கும் ஒரு தருணத்தில் சட்டென முடிகிறது கதை. செல்லம்மாதான் இந்தக் கதையின் மைய வேர். அவரைச் சுற்றித்தான் கதையின் நகர்வு இருக்கும் என்ற எண்ணம் சீட்டுக்கட்டெனக் கலைந்து ஏமாற்றம் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏனெனில், மிகக் கனமான உணர்வுக் கலவையாய் உருவகப்படுத்தப்பட்டிருந்தார் செல்லம்மா. அதே நேரம், ஆனந்தனைச் சுற்றிய கதையமைப்பு பால்யத்தைக் கிளறி, பள்ளிப் பருவத்தை நினைவூட்டி, நம்மை இலகுவாக உள்ளிழுத்துக்கொள்கிறது. செல்லம்மாவும் ஆனந்தனும் தயாளனும் ராம்பிரபுவும் பேருந்துப் பயணத்தில் பக்கத்து இருக்கையிலோ, ரேஷன் கடை வரிசையில் முன்பாகவோ சினேகமாய் சிரித்துக் கடக்கிற எவரோ ஒருவராக நமக்கு அறிமுகமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். அத்தனை எதார்த்தம். ஒரு திரைக்கதைக்கான வேகத்தை இந்த நாவல் கொண்டிருக்கிறது. ஆத்மார்த்தி அதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். மிட்டாய் பசி; கசக்கவில்லை. ஒரு ஃபுல் மீல்ஸ் பரிமாறல்.

- பா. அசோக்

மிட்டாய் பசி

ஆத்மார்த்தி

வெளியீடு: தமிழினி, சென்னை-51.

விலை: ரூ.180

தொடர்புக்கு: 8667255103.

SCROLL FOR NEXT