ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அப்பள்ளியின் நிறுவனர் எஸ்.மீனாட்சிசுந்தரம் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மாலை காந்தியடிகளின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார். பாடப் புத்தகத்தைத் தாண்டி ஒரு பொதுப் புத்தகத்தின் அறிமுகம் எனக்கு இப்படித்தான் முதன்முதலாகக் கிடைக்கத் தொடங்கியது.
பொதுவுடமை இயக்கத்தவரான எனது தந்தை, நூல்களையும் இதழ்களையும் ஆழ்ந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர். நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ‘குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்’ என்ற டால்ஸ்டாயின் புத்தகத்தை எனக்கு அளித்து, “பாடப் புத்தகத்தை நன்றாகப் படித்தால் நல்ல மார்க் வாங்கலாம். இந்த மாதிரி புத்தகங்களையும் சேர்த்துப் படித்தால் சிறந்த மனிதனாகலாம்” என்று கூறினார். எனது வீட்டுச் சூழலும் அங்கு இருந்த நூல்களும் இதழ்களுமே சிறு வயதில் என்னை வாசிக்கத் தூண்டின.
ஒரு கட்டத்தில் தமிழில் வெளியான சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது. தமிழறிஞர் எஸ். ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த நிகோலோய் ஓஸ்ட்ரோவ்ஸ்கியின் ‘வீரம் விளைந்தது’ என்ற ரஷ்ய நாவலை கல்லூரிக் காலத்தில் வாசித்திருக்கிறேன். இந்நாவலாசிரியரின் வாழ்வும் பணியும் குறித்து அண்மையில் ‘வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு மொழி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இந்நூலைச் சமீபத்தில் வாசித்தேன். இந்நாவலாசிரியரின் வாழ்க்கை வரலாறு அந்நாவலுக்குச் சமமான தனிச்சிறப்பு கொண்டது. ஓஸ்ட்ரோவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாது அவரின் கடிதங்கள், கட்டுரைகள், உரைகள் ஆகியவையும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.
இம்மாபெரும் எழுத்தாளர் மறைந்தபோது அவருக்கு வயது 32. இவர் எழுதிய முழுமையான படைப்பு இது ஒன்று மட்டுமே. தனது இரண்டாவது படைப்பான ‘புயலின் மைந்தன்’ என்ற நாவலின் முதல் பாகத்தை எழுதி முடித்த இவர், இரண்டாம் பாகத்தை எழுதத் தொடங்குவதற்கு முன்பே காலமாகிவிட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்த இவரைப் பற்றி அவர் வீட்டுக்கு அருகில் இருந்த நூலகர், “நான் இவருக்குப் புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.
புத்தகங்கள்... புத்தகங்கள்.. புத்தகங்கள் முடிவேயில்லாமல் புத்தகங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தேன். வழக்கத்துக்கு மாறான வாசகராக இருந்தார் ஓஸ்ட்ரோவ்ஸ்கி. அவ்வளவு புத்தங்களையும் விழுங்கித் தீர்த்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தக வாசிப்பு என்பது சமூக முன்னேற்றத்துக்கும் மாற்றத்துக்கும் அடித்தளமிடும் என்பதில் சந்தேக மில்லை. வாசிப்பை மக்கள்மயமாக்க வேண்டியது இன்றைய தலையாய தேவை. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் ‘இல்லந்தோறும் நூலகம்’, ‘நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்’ என்ற முப்பெரும் முழக்கத்தை முன்வைத்து மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது.
த.ஸ்டாலின் குணசேகரன், தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை
-கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்