இசைத் துறையிலும் பொது வாழ்விலும் பக்தியைப் பரப்புவதிலேயே லட்சியமாக இருந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவரின் நூற்றாண்டை சர்வதேசப் பெண்கள் தினத்தோடு சிறப்பிக்கும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சியை அம்ரோஷியா ஆர்ட் கேலரியில் சென்னை, அண்ணாசாலையில் இருக்கும் மியூஸி மியூஸிக்கல்ஸ் நிறுவனம் தொடங்கிவைத்தது. ஓவியக் கண்காட்சியை, தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீணை காயத்ரி தொடங்கிவைத்தார். ஓவியர்கள் ஜோதி, அருண், பிபின், கணபதி சுப்ரமண்யம், மணவாளன், முரளிதரன் அழகர், ஷிவராம், ஸ்ரீஜித் வெல்லோரா, விநோத்குமார் ஆகியோரின் 55 ஓவியங்கள் கண்காட்சியை அலங்கரித்தன.
ஓவியர் ஷிவராமின் ஆறு ஓவியங்களும் நேர் கோடுகளைப் பயன்படுத்தியே வரையப்பட்டிருந்தன. எம்.எஸ். என்றவுடனேயே அவர் பாடிய சுப்ரபாதமும் விஷ்ணு சகஸ்ரநாமும்தான் எல்லோரின் நினைவுக்கும் வரும், இந்த விஷயங்களைத் தனக்கே உரிய நவீனத்துடன் ஓவியத்தில் பிரதிபலித்திருக்கிறார் ஓவியர் ஷிவராம். இசை அரசியைப் பெருமைப்படுத்தும் இந்த ஓவியக் கண்காட்சியை வரும் 8-ம் தேதி வரை அரங்கில் காணலாம்.
கராச்சி இலக்கியத் திருவிழா
பாகிஸ்தானில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ்ஸும், பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து கராச்சியில் இலக்கியத் திருவிழாவை நடத்திவருகின்றன. 2017-ம் ஆண்டுக்கான இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்த இலக்கியத் திருவிழாவில் இலக்கிய விவாதங்களும், புத்தக வெளியீடுகளும், படைப்பூக்கத்தை வளர்க்கும் வகையிலான எழுத்துப் பட்டறைகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் அனுபம் கெர் விழாவுக்குச் சென்றபோது பாகிஸ்தான் அரசு அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலைகள்.காம்
சமூக வலைத்தளங்கள் பரவலான சூழலில் அநேக இணைய இதழ்கள் வரத் தொடங்கி விட்டன. இவற்றில் இலக்கியத்துக்கான இதழ்கள் மிகவும் சொற்பமே. அவற்றுள் ஒன்று மலைகள்.காம். கவிஞர் சிபிச்செல்வன் ஆசிரியராக இருந்து இந்த இணைய இதழை நடத்திவருகிறார். 15 நாட்களுக்கு ஒரு முறை இதழைப் பதிவேற்றுகிறார். இலக்கியம், கலை, நிகழ்வுகள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல பகுதிகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. கவிதை, சிறுகதை, நேர்காணல், ஓவியம், நாடகம் திரைப்படம், இசை எனப் பல்வேறு கலை உள்ளடக்கங்களை இந்த இணைய இதழ் கொண்டுள்ளது. கடந்த இதழ்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு அவை எளிதாகக் கிடைக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. எளிய வடிவமைப்பில் தொடர்ந்து வெளிவரும் இந்த இணைய இதழை வாசிக்க: >http://malaigal.com/
டெல்லியின் வீதி ஓவிய விழா
டெல்லிவாசிகள் வாய்பிளக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆரம்பித்து இன்றோடு முடியவிருக்கும் ‘டெல்லி வீதி ஓவிய விழா’வின் நல்விளைவுதான் இது. உலகெங்குமுள்ள வீதி ஓவியர்கள் பங்கேற்கும் விழா இது. டெல்லியின் இரு வேறு பகுதிகளில் உள்ள சுவர்களை அவர்களது விதவிதமான ஓவியங்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. ‘இது என்னன்னே புரியலை, ஆனா அழகா இருக்கு’ என்றரீதியில் மக்கள் இந்த ஓவியங்களை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அவர்களாகவே அந்த ஓவியங்களுக்கு அர்த்தங்களைக் கொடுத்துக்கொள்கிறார்கள். இதுதான் இந்த ஓவியங்களின் வெற்றி என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 100 கண்டெய்னர்களிளும் வரைந்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் நாடெங்கும் பல்வேறு திசைகளில் பயணிக்கப் போகின்றன.