சோளக் கொல்லைகளுக்கு நடுவே, சுற்றிலும் இரும்பு முள்வேலியால் பாதுகாக்கப்படும் ஒரு வளாகத்தில், காலைக் கதிரவனின் ஒளிபட்டு மிளிர்ந்த இரு கோயில் விமானங்களும் தங்கத்தாலான பிரம்மாண்ட ஆபரணங்கள்போல் காட்சியளித்தன. திருச்சி-திண்டுக்கல் சாலையிலிருந்து விராலி மலையருகே வலப்புறம் பிரியும் பாதையில் சிறிது தூரம், சென்றால் மூவர் கோயில் எனப்படும் இந்தக் கொடும்பாளூர் ஆலயங்களைக் காணலாம். இன்று மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது இவ்வரலாற்றுச் சின்னம்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சிப் பகுதிகளில் தொன்மை வாய்ந்த ஆலயங்கள் பல உண்டு. இவற்றில், வரலாற்று நூல்களில் தவறாமல் இடம்பெறுவது புகழ்பெற்று விளங்கும் சோழர்களின் படைப்புகளே. ஆனால் சிற்றரசர் கட்டிய கோயில்கள் பல இங்கு இருந்தாலும், அவற்றின் கலைப் பாரம்பரியத்தைக் கண்டுகொள்வார் யாருமில்லை. எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இருக்குவேளிர் மன்னர்கள்தாம். சங்க இலக்கியத்தில் வேளிர் என்றறியப்படும் இந்தச் சிற்றரசர் வம்சம் தென்னிந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பல போராட்டத்தில் சோழர்களுக்குத் தோள் கொடுத்து உதவியது. ராஜராஜ சோழன் இருக்குவேளிர் அரசிளங்குமரி வானதியை மணந்து இரு வம்சங்களுக்கிடையே உறவை உறுதிப்படுத்தினான் என்பது வரலாறு. பல்லவ மன்னனைக் காவிரிக்கரையில் போரிட்டு வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தவர் இருக்குவேளிர் அரசன் பூதி விக்ரமகேசரி.
இருக்குவேளிர்கள் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டனர். இன்று விராலி மலையிலிருந்து ஐந்து கி. மீ. தூரத்தில் உள்ள இந்தக் குக்கிராமம் அன்று ஒரு பெரும் நகராக இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன. பாண்டிய நாட்டின் தலைநகரையும் சோழ நாட்டின் தலைநகரையும் இணைத்த பெருவழியில் அன்றைய கொடும்பாளூர் அமைந்திருந்தது. அங்கே கிடைத்த கல்வெட்டொன்று இந்நகரை இப்படி வர்ணிக்கிறது: “கொடிகள் பறக்கும் கோபுரங்களும் கோட்டை கொத்தளங்களும் பெருந்தூண்கள் கொண்ட மண்டபங்களும் நீண்ட மதிற்சுவரும் கொண்டது.” சிலப்பதிகாரத்திலும் இந்நகரிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் சாலைகளைப் பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது:
கொடும்பை நெடும்புறக் கோட்ட கம்புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்
காளாமுகர்களின் சக்தி வாய்ந்த கிளைப்பிரிவு ஒன்று இங்கு செயல்பட்டிருந்தது. வணிகக் குழுக்களும் இந்நகரில் இயங்கிக்கொண்டிருந்தன. இருக்குவேளிர்கள் சில நூற்றாண்டுகளேனும் இந்நகரை மையமாகக் கொண்டு கோலோச்சியிருந்தனர் என்பது தெளிவு. அன்றிருந்த அந்த மகிமையின் அடையாளமாக இன்று இங்கு இருப்பதெல்லாம் இந்த மூவர் கோயில் எனும் வரலாற்றுச் சின்னம் மட்டுமே. மூவர் கோயில் என்றறியப்பட்டாலும் பல கோயில்கள் இருந்த இந்த வளாகத்தில் இன்று இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. அதிலும் அவற்றின் நுழைவாயில்களும் அவை சார்ந்த அறைகளும் சிதைந்துவிட்டன. கருவறைகளும் அதன் மேலுள்ள விமானம் என்று குறிப்பிடப்படும் கட்டுமானமும் அழியாமல் நிற்கின்றன. இந்த இரு ஆலயங்களுக்கு அடுத்து இருந்த இன்னொரு கோயிலின் அடித்தளம் மட்டும் இருக்கிறது. விரிந்த தாமரை இதழ்கள் போல் செதுக்கப்பட்ட அலங்காரம் (பத்மப்படை) அடித்தளத்தைச் சுற்றி அணி செய்கிறது.
இந்த மூன்று ஆலயங்களுமே பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு ஆட்சி செய்த மன்னன் பூதி விக்ரமகேசரி தன் இரு ராணிகளின் பெயரில் எடுப்பித்தவை. இந்த வளாகம் சிதையாமல் முழுமையாக இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நம்மை வியக்க வைக்கின்றன இந்த இரு கோயில்களும் அவற்றில் எஞ்சியிருக்கும் சிற்பங்களும். இந்த ஆலயங்களைச் சுற்றிப் பதினைந்து சிற்றாலயங்கள் இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் கோயில்களைச் சுற்றிச் சிறுதெய்வங்களுக்குச் சிறிய கோயில்களை எடுப்பிப்பது வழக்கம், நார்த்தாமலையிலிருப்பது போல.
மாதொருபாகன், சோமஸ்கந்தர், சிவனும் பார்வதியுமான சோமஸ்கந்தர், நிற்கும் சிவன், அமர்ந்திருக்கும் சிவன், தட்சிணாமூர்த்தி, ஆலிங்கனமூர்த்தி, கங்காதரர், காலாரிமூர்த்தி, கஜசம்காரமூர்த்தி எனப் பல உருவங்களில் சிவன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். சிறிய உருவில் யாழி, சிவகணங்கள் போன்ற தொடர்சிற்பங்கள் வெவ்வேறு அங்கங்களை அலங்கரிக்கின்றன. பூ வேலைப்பாடுகளும் வரிமானங்களும் அழகு சேர்க்கின்றன. அழிந்துபட்ட ஆலயங்களை அலங்கரித்த பிக்ஷாடனர், திரிபுரசுந்தரி போன்ற பல சிற்பங்கள் இந்த இடத்தில் கண்டெடுக்கப்படுள்ளன. அவை இன்று புதுக்கோட்டை, சென்னை அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திலும் ஒரு அருங்காட்சியகம் பல அரிய சிற்பங்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்தத் தெய்வங்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாலும், ஆழமாகச் செதுக்கப்பட்டிருப்பதால் ஏறக்குறைய முழுச் சிற்பங்கள்போல் தோற்றமளிக்கின்றன.
இந்தச் சிற்பங்கள் ‘முற்காலச் சோழர் பாணி’ என்று வரலாற்றாசிரியர்கள் பலரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் கூர்ந்து கவனித்தால் பல்லவர் கால அடையாளங்களையும் காணலாம் எனக் கலை வரலாற்றாசிரியர் சுரேஷ் பிள்ளை தனது
“ஸ்டடி ஆஃப் டெம்பிள் ஆர்ட்” (Study of Temple Art) என்ற நூலில் கூறுகிறார். இருக்குவேளிர் பாணி தனித்துவமானது என்றும் முற்காலச் சோழர் கலைக்கு முற்பட்டது என்றும் அவர் அவதானிக்கிறார். வட்ட வடிவ முகம், சிறிதே உப்பிய கன்னங்கள், மெலிந்த அங்கங்கள், இயல்பான அசைவுகள் ஆகியவற்றை அடையாளங்களாகக் காட்டலாம்.
1930-களின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட நிலைப்படம் ஒன்றில் இந்த ஆலயங்கள் மிகவும் சிதைந்த நிலையிலிருப்பதைக் காண முடிகிறது. புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தொல்லியலாளர் கே.வெங்கடராஜு இதைப் புனரமைத்துள்ளார். இன்று நார்த்தாமலை போன்ற ஆலயங்கள் ‘புதுப்பிக்க’ப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது அந்த நாட்களிலேயே பழைய சுவடு மாறாமல் அவர் செய்திருக்கும் மீள்பணி பிரமிக்க வைக்கிறது. அந்தச் சிறிய சமஸ்தானம் தன்னகத்தே உள்ள சில முக்கியமான வரலாற்றுச் சின்னங்களை குடுமியாமலை, சித்தன்னவாசல் உட்பட கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தது இந்தியக் கலைவரலாற்றில் ஒரு சிறப்பான இயல். -
சு. தியடோர் பாஸ்கரன், எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்,
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com