இரண்டு நாட்களுக்கு முன்பு திரைப்பட இயக்குநர் ஒருவர் சாலையில் மரணமடைந்து கிடந்த செய்தியைப் பார்த்தபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. தெரிந்த ஒரு மரணம் இது. இது போன்று அறியாத மரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
திரைப்படத் துறை மிகவும் விசித்திரமானது. எல்லா விதமான மனிதர்களையும் கொண்டது. தயாரிப்பு நிறுவனங்கள் படங்கள் தயாரித்தபோது உதவி இயக்குநர் தொடங்கி, தயாரிப்பு உதவியாளர் வரை அத்தனை பேருக்கும் மாதச் சம்பளம் நிர்ணயிக்கப்படும். நிர்ணயித்த சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும். தனிநபர்கள் தயாரிப்பாளர்களானபோது, மெதுவாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. படம் நஷ்டமானாலும் தங்கள் சொத்தை விற்றுக்கூட சம்பளம் தந்தவர்கள் ஏராளம் உண்டு. சம்பளம் தராமல் கடைசி வரை இழுத்தடித்தவர்களும் உண்டு.
‘ஜானகிராமம்' நூலைத் தொகுத்த பேராசிரியர் கல்யாணராமனின் நேர்காணலைச் சமீபத்தில் ஸ்ருதி டிவியில் பார்த்தபோது, ஒரு தகவல் சொல்லியிருந்தார். தி.ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலம்’ நாடகத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். தி.ஜா.வேகூட இந்தக் கதை சரியாக வருமா என்று சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். ஒரு நம்பிக்கையில் படமாக எடுக்க, அது நஷ்டமாகிவிட்டது. நடித்துச் சம்பாதித்த சொத்தினை விற்று, படத்தில் நடித்த நடிகர்களுக்கு சம்பளப் பாக்கியைத் தீர்க்கும்போது, நடிகர்கள் வாங்க மாட்டேன் என்றிருக்கிறார்கள். அதற்கு சகஸ்ரநாமம், “இந்தப் படம் ‘வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும்’ என்பதைத்தான் சொல்கிறது. இப்படி ஒரு படத்தைத் தயாரித்த நானே வாக்கு தவறக் கூடாது” என்றிருக்கிறார். இப்படியும் தயாரிப்பாளர்கள் உண்டு. உதவி இயக்குநர்களுக்கும் சேர்த்துத் தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்று முழுவதுமாகத் தானே எடுத்துக்கொண்ட இயக்குநர்களும் இங்குண்டு. இங்கு ஒரு இயக்குநர் முதல் படம் வெற்றி கொடுத்தார் என்பதை விடக் கடினமானது, அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது. பிரபலமான இயக்குநர்கள்கூட ஒரு வருட காலம் படம் இயக்கவில்லை என்றால், பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இங்கு எழுபது வயதானாலும்கூட மூளை, மனம், உடல் மூன்றும் பந்தயத்துக்குத் தயாராகும் குதிரைபோலப் பயிற்சி கொண்டிருக்க வேண்டும். இதில் ஒன்று சோர்ந்தால்கூட உடன் வரும் குதிரைகள் மைதானத்தில் ஏறி மிதித்துவிட்டு ஓடும்.
விசித்திரமான துறைதான் இது.