என் அப்பா ஒன்றும் பெரிய படிப்பாளி இல்லை என்றாலும், வாரப் பத்திரிகைகள் அனைத்தையும் படிப்பவர். அப்பாவின் வழியே எனக்குள்ளும் வாசிப்பு நுழைந்தது. நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே, தமிழ்வாணன் எழுதிய ’துப்பறியும் சங்கர்லால்’ தொடர்கதையைப் படிப்பேன். அடுத்த வாரம் கதை இப்படி இருக்குமோ என்று நானே கற்பனை செய்தும் கொள்வேன்.
அப்புறம், சாண்டில்யன் நாவல்களைப் படித்துவிட்டு, அவற்றில் வருகிற கதாபாத்திரங்களாக நானே உருமாறுவேன். இப்படிப் போய்க்கொண்டிருந்த என் வாசிப்புப் பயணத்தில், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ.பாலன் எழுதிய ‘தூக்குமர நிழலில்’ நூல் என்னை வெகுவாய் உலுக்கியது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ.பாலன், தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு விடுதலையாகிறார். அவரது சிறை வாழ்க்கையின் உண்மை அனுபவங்களே அந்நூல். பல நாட்கள் அந்த நூல் தந்த தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் கிடந்தேன்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சுஜாதாவின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். சிலவற்றைச் சொல்லி, சிலவற்றைச் சொல்லாமல் போகும் அவரது எழுத்து நடை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரது கதையில் வரும் ஒரு வரியை வாசித்துவிட்டு, அவர் எதற்காக இப்படிச் சொன்னார் என பல மணி நேரம் யோசித்துக்கொண்டிருப்பேன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜா சந்திரசேகர் எப்போதும் கவிதை எழுதிக்கொண்டிருப்பார். என்னிடமும் படிக்கக் கொடுப்பார். நானும் அதைப் படிப்பேன். எனக்கும் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. நண்பர் ஜீவபாலன் மூலமாக மெளனியின் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. 10-க்கு 8 அளவுள்ள சிறிய அறைக்குள் நாங்கள் 10 பேர் உட்கார்ந்து எதையாவது படித்துக்கொண்டேயிருப்போம்.
நான் படிக்கும் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வரியையும் நான் அப்படியே காட்சியாகக் கற்பனை செய்துகொண்டு படிப்பது என் வழக்கம். இது என் திரைப்படக் காட்சியமைத்தலுக்கு மிகவும் உதவியாக அமைந்தது. ஜெயந்தன் எழுதிய ‘பாவப்பட்ட ஜீவன்கள்’ எனக்குப் பிடித்த நாவல். அதைப் படமாக்க வேண்டுமென்கிற ஆசையும் எனக்கிருந்தது. அவரைக் கடைசிவரை சந்திக்க முடியாமலேயே போனது. சமீபத்தில் ‘மா. அரங்கநாதன் படைப்புகள்’ எனும் நூலை வாசித்துவருகிறேன். மிகவும் தேர்ந்த கதைசொல்லியாக மா. அரங்கநாதன் என்னை வசீகரிக்கிறார்.
ஒரு புத்தகத்தை நான் படிக்கும்போது, அந்தப் புத்தகமும் என்னைப் படிக்கிறது என்றே நான் நம்புகின்றேன். புத்தகம் படிக்கிற என்னை அந்தப் புத்தகம் நின்று ரசிக்கிறது, கவனிக்கிறது, என்மேல் காதலும் கொள்கிறது. நானும் அந்தப் புத்தகத்தின்மேல் காதல் கொள்கிறேன். புத்தகத்தின்மேல் நாம் கொள்கிற காதல் என்றைக்கும் நம்மைப் புதிய மனிதர்களாய் வைத்திருக்கும்.