காவிரிக் கரையில் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட மாயவரம் என்னும் ஊரின் கதையை, சமீப நூற்றாண்டில் அது சந்தித்த மாற்றங்கள் வழியாகச் சொல்லும் சுவாரசியமான ஊர் புராணம் இது. ஒரு ஆய்வாளரின் புறநிலையான பார்வை, புள்ளிவிவரங்களைக் கொண்ட நூல் அல்ல இது. மாயவரம் என்னும் ஊரில் வாழ்ந்த நபர் தனது பின்னணி, பார்வை, காலம், கருத்து, தொடர்புகள், வளங்கள் ஆகியவற்றின் வரம்புகளுடனேயே எழுதிய புத்தகம் இது. தான் பார்த்து வளர்ந்த ஊரின் வளர்ச்சியை ரசனையோடும் ஆதூரத்தோடும் பார்க்கும் ஒரு கதைசொல்லியின் சுவாரசியமும் புன்னகையும் அவரது ஆற்றாமைகளும் சேர்ந்து பதிவாகிய இந்த நூல் ஆய்வாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.
தான் மாயவரத்தான் என்று முன்னுரையிலேயே அறிவித்துவிடும் நூலாசிரியர் சந்தியா நடராஜன், அந்தத் துல்லியமான வரையறைக்குள் அந்த நகரத்தின் ஒரு நூற்றாண்டு நினைவுகள், நிகழ்வுகள், மனிதர்கள் பற்றிக் கூடுமானவரை உழைத்துத் தொகுத்திருக்கிறார். ஊரின் மாறுதல், சமூக உறவுகள், பண்பாடுகளின் மாறுதல் குறித்த உற்சாகமும் துக்கமும் பரவசமுமாகத் தஞ்சாவூர் தன்மையோடு வெளிப்படும் நடராஜனின் எழுத்தில், திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு பழைய ஆளை, நூலாசிரியர் மறைத்தும் கொள்ளவில்லை.
நாகரிகங்களின் தொட்டிலான ஆற்றிலிருந்துதான் இந்தப் புத்தகமும் தொடங்குகிறது. காவிரிக் கரையோடு எழும் ஞாபகமும் அதோடு சின்னப் பாலமும் ரங்கநாதர் படித்துறையும் நினைவுகூரப்படுகின்றன. உடனடியாக ஞானக்கூத்தனின் புகழ்பெற்ற கவிதையான ‘சைக்கிள் கமலம்’ நினைவுகூரப்பட்டு, அந்த ஊரின் நினைவாக ஞானக்கூத்தனும், மாயவரத்துக்கு அருகில் 15 கிமீ தூரத்தில் இருக்கும் ந.முத்துசாமியின் புஞ்சை கிராமமும் நினைவூட்டப்படுகிறது. ‘திரும்பிப் பார்க்கையில் காலம் இடமாகக் காட்சியளிக்கிறது’ என்று நகுலன் சொல்வதோடு கூடுதலாக, காலம் மனிதர்களாகவும் காட்சியளிப்பதை நடராஜன் உறுதிப்படுத்துகிறார்.
உடனடியாக வரலாற்று ஆசிரியராக இருந்த, பெரியாரைப் பிடிக்காத சாமிநாத சர்மா, ஓர் உரையாடல் வழியாக நினைவுகூரப்படுகிறார். காவிரிக்குப் பக்கத்தில் உள்ள முத்து வக்கீல் சாலையில் நடக்கும் திராவிடர் கழகக் கூட்டங்கள் அதைத் தொட்டு நினைவுகூரப்படுகின்றன. அங்கே, ராமதாஸ் என்ற திராவிடர் கழகப் பேச்சாளர் நமக்கு முன்னர் தோன்றுகிறார். இப்படி ஒன்றைத் தொட்டு இன்னொரு பொருள், இன்னொரு ஆள், இன்னொரு இடம் என இந்தப் புத்தகம் விரிவது சுவாரசியம். மாயவரம் என்னும் ஊரில் உள்ள இடங்கள், ருசிகள், பண்பாடு, வரலாறு, அரசியல், ஆளுமைகள், உறவுகள் என மாறி மாறிப் பேசப்படும் இந்நூலில் பேச்சாளர்கள், தலைவர்கள், பணக்காரர்கள், கட் அவுட் கலைஞர், சிகை ஒப்பனைக்காரர், திரையரங்க உரிமையாளர், தையல் கலைஞர், ஜவுளிக்கடை உரிமையாளர் என எல்லாரும் முழு ஆளுமைகளாக அவரவருக்கேயுரிய தனிக் குணங்களுடன் வந்துவிடுகின்றனர். கருணாநிதியின் கட் அவுட்களை வரைவதற்குப் புகழ்பெற்ற பி.டி.ராஜனின் மகளைத் தேடிப்பிடித்து, அவர் குறித்த தகவல்களை இந்த நூலில் எழுதியுள்ளார் நடராஜன்.
மாயவரத்தில் இருந்த ஒரேயொரு ஆங்கிலோ-இந்தியக் குடும்பமான பிரசவ மருத்துவர் ரோட்ரிக்சின் குடும்பம் பற்றிய ஒரு அத்தியாயம் திகழ்கிறது. தமிழ் நவீனமடைந்த வரலாற்றின் முக்கிய நாயகர்களான உ.வே.சாமிநாதரும் மகாவித்வான மீனாட்சி சுந்தரமும் மாயவரத்தில் சந்தித்த நிகழ்ச்சி இங்கே ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து நினைவுகூரப்படுகிறது. தமிழின் முதல் நாவலைப் படைத்த மாயூரம் வேதநாயகமும், கல்கியும் மாயவரம் பின்னணியில் பேசப்படுகின்றனர். கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதைக்கான களம் கொள்ளிடக்கரைப் பிரதேசம் என்று சொல்கிறார் நூலாசிரியர். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் அங்குள்ள கிராமங்களில் இருந்த தீவட்டிக் கொள்ளையர்களின் வாழ்க்கையையும் அதுதொடர்பான வாய்மொழிக் கதைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
மாயவரம் என்ற ஊரின் பின்னணியில் ஒரு காலகட்டத்தில் எதிரெதிராக நின்று, உரையாடி வளர்ந்த திராவிட, காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்களின் ஆளுமைகளும் நிகழ்ச்சிகளும் விரிவாக இடம்பெறுகின்றன. திருவாரூர் தங்கராசு பற்றிய கதை முரண்நகையுடன் முடிகிறது. திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த வேணுகோபால் சர்மா அதை மாயவரத்தில் உள்ள மதீனா லாட்ஜில் வரைந்த தகவல் சுவாரசியமாகச் சொல்லப்படுகிறது. அந்தப் படத்தில் திருத்தம் செய்திருக்கிறார் பாரதிதாசன். தேவதாசிகள் தொடர்பிலான ஒரு இயக்கம் நடந்த மாநிலம் இது. தேவரடியார்களின் வாழ்க்கை மையம் கொண்டிருந்த இடங்களில் ஒன்றான மாயவரத்தின் சரித்திரத்தோடு இன்றியமையாத தொடர்பு கொண்டதால், அதைப் பற்றிய ஒரு அத்தியாயமும் இந்நூலில் உண்டு.
தமிழில் தலபுராணங்கள் ஆலயங்களின் பின்னணியில் எழுதப்பட்டவை நிறைய உண்டு. ஆனால், சமீப நூற்றாண்டில் பெரும் மாற்றங்களைக் கண்ட சிறுநகரங்கள், ஊர்களின் பண்பாட்டு வரலாற்றை எழுதும் முயற்சி போதிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. அந்த வகையில் மாயவரத்தைப் பற்றித் தன்னிலையிலிருந்து, ரசமாக எழுதப்பட்ட இந்த நூல் உந்துதலாக இருக்கக் கூடியது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
மாயவரம்
சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83.
ரூ.220
தொடர்புக்கு: 044 - 24896979