அதிக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் ஒன்று என்ற பெருமையப் பெற்றது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். பலரும் வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கும் உலகியல் நூலாகவே அதனை அணுகியுள்ளனர்.
‘ஜீவ அமிர்தம்’ என்னும் சித்தர் மரபு இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவருபவரும் ‘ஞான அமிர்தம்’, ‘ஜீவ அமிர்தம்’ உள்ளிட்ட சித்தர் நூல்களை எழுதியவருமான கோ.திருமுருகன் இந்த நூலில் 1,330 குறள்களுக்கும் மெய்ப்பொருள் விளக்க உரையை எழுதியுள்ளார். திருவள்ளுவரைச் சித்தர் மரபைச் சேர்ந்தவராகக் கருதி, அவரைச் சித்தர்நெறி மூதாதையாக வழிபட்டு நின்றே திருக்குறளின் மெய்ப்பொருளை விளக்கிச் சொல்லும் இப்பணியைச் செய்துள்ளார்.
இந்த நூலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்துரை அளித்திருக்கிறார். அமைச்சர்கள், அறிஞர்கள், தொழில்துறையினர் என்று பல்வேறு துறையினரும் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளனர். பெரிய அளவு, கெட்டி அட்டை, 600 பக்கங்கள், 133 அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பொருத்தமான ஓவியம் என்று நூலை வடிவமைத்திருக்கின்றனர்.
- கோபால்
குறள் அமிர்தம் - திருக்குறளின் மெய்ப்பொருள்
கோ.திருமுருகன் (எ) பூர்ணாநந்தன்
வெளியீடு - வைதேகி பதிப்பகம்
தொடர்புக்கு – 9176564723
விலை - ரூ.800