கல்லூரிக்குள் நுழையும்போதே பலருக்கும் பாடப் புத்தகங்கள் தாண்டி இலக்கியப் புத்தகங்கள் படிக்கும் சூழல் வாய்க்கும். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு அமையவில்லை. நான் ஓவியக் கலைக்குப் போய்விட்டேன். ஓவியம் வரைவதிலேயே 6 ஆண்டுகள் கடந்து போயின.
ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆங்கில நாவல்களைத்தான் முதலில் படிக்கத் தொடங்கினேன். அப்போது கன்னிமாரா நூலகத்தில் 3 ரூபாய் செலுத்தினால், 3 அட்டைகள் தருவார்கள். அதற்கு 3 புத்தகங்கள் எடுக்கலாம். ஒரு வாரம் படிக்கலாம். பேர்ல் எஸ் பக் எழுதிய ‘த குட் எர்த்’, பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஜோலா எழுதிய ‘தி எர்த்’ போன்ற நாவல்களைப் படித்தேன். எனக்குள்ளிருந்த வாசிப்பு ஆர்வத்தை இந்த நாவல்கள் வெகுவாக தூண்டின.
திரைப்படத் துறைக்குள் நுழைந்த பிறகுதான், தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். முதலில், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகிய நாவல்கள் என்னை ஈர்த்தன. தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மோகமுள்’, ‘செம்பருத்தி’ ஆகிய மகத்தான நாவல்கள் எனக்குப் பிடித்துபோயின. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை எழுத்தாக்கிய ஜெயகாந்தனின் நாவல்களும் சிறுகதைகளும் எனக்குப் பிடிக்கும். நா. பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரால் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களையும் எனக்குப் பிடிக்கும். ஒரு எழுத்தாளர் இந்த சமுதாயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை அவரது பார்வையிலேயே அறிந்துகொள்ளும் வாய்ப்பாக எனது வாசிப்பு அனுபவம் அமைந்தது.
எனது 40 ஆண்டு காலத் திரைப்படப் பணிகளை 2005-ல் நிறுத்திய பிறகே, நம் தொன்மையான தமிழ் மொழியின் சங்க இலக்கிய நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். கவிதைகளில் பாரதியும் கண்ணதாசனும் என்னைப் பெரிதாய் ஆட்கொண்டவர்கள்.
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பற்றிச் சொற்பொழிவாற்ற வேண்டும் என்றபோது ஒரு தவம்போல் அந்தக் காவியங்களில் ஒன்றிப்போய், மிகுந்த ஈடுபாட்டோடு படித்தேன். முதலில் எனக்குப் புரியவில்லை. விடிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்து மனம் ஆழ்ந்து படித்தேன். பல மணி நேரம் குறிப்பெடுத்து எழுதினேன். வெறும் மனப்பாடமாக இல்லாமல், அவற்றை உள்வாங்கிக்கொண்டு படித்ததால்தான் என்னால் எந்தக் குறிப்பும் இல்லாமல் அவற்றைப் பற்றி பேச முடிந்தது.
மீண்டும் திருக்குறளை வாசித்துவருகிறேன்.100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சிறுகதைகளாகச் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஓவியனாக, திரைக்கலைஞனாக மட்டுமே இருந்த என்னை வீரிய மிக்க பேச்சாளனாக மாற்றியிருப்பது எனது ஆழ்ந்த புத்தக வாசிப்பு தவிர வேறில்லை.
-கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்