கோவைக்கு மேற்கே கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் செம்மேடு. சாதியக் கட்டுகள் அகலாது கிடக்கும் இந்தக் கிராமத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது காந்தி காலனி என்கிற தலித் குடியிருப்பு. சுமார் 300 வீடுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் கல்லூரி சென்று படித்த இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது குறைந்தபட்சம் 200 பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
இங்குள்ள சமூகநலக் கூடத்தைச் சுத்தம் செய்து பள்ளிப் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகவே இரவுப் பாடம் இலவசமாக எடுத்துவருகிறார்கள் படித்த இளைஞர்கள். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். காலனிக்குள் ஒரு நூலகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
முதலில், நண்பர்களுக்குள்ளேயே சில்லறைகள் போட்டு சில நாளிதழ், வார இதழ்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சமூக நலக்கூடம் படிப்பகம் ஆனது. பின், வீட்டிலிருந்து நூல்களைக் கொண்டுவந்து இங்கே படிப்பதற்காக வைத்திருக்கிறார்கள். “இங்கே ஒரு பகுதியில் நூலகத்துக்கான அனுமதி கொடுங்கள். நாங்களே நிர்வகிக்கிறோம்!” என்று மாவட்ட நூலகர், மாவட்ட ஆட்சியர், உள்ளூர் அமைச்சர் என்று வரிசையாகச் சென்று பார்த்ததன் தொடர் முயற்சி கைகூடவும் சமூக நலக்கூடம் இப்போது நூலகம் ஆகிவிட்டது.
உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் சிலர் உதவியில், ரூ.58 ஆயிரத்தில் சமூக நலக்கூடத்தைச் சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து, மேஜை நாற்காலிகள் வாங்கிப் போட்டு இப்போது பளீரென மின்னுகிறது நூலகம். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களுடன் இயங்க ஆரம்பித்துள்ள இந்நூலகத்தில் அதற்குள் 5 புரவலர்கள் சேர்ந்துள்ளனர். 500 உறுப்பினர்கள் சந்தா செலுத்த விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இங்குள்ள இளைஞர்கள் செல்லத்துரை, ரங்கராஜ் ஆகியோர் கூறும்போது, “இந்தத் தீவிர முயற்சிக்கு முழுமுதற் காரணம் செல்வக்குமார் என்ற இப்பகுதி இளைஞர்தான். அவர் பிஎச்.டி முடித்தவர். குஜராத் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார். நம் காலனிக்கு ஒரு நூலகம் வராதா என்பது அவரது இளமைக் காலக் கனவு. அதைச் சொன்னபோதுதான் இந்தத் தலைமுறையினருக்காவது அந்த வசதியை உருவாக்கிக்கொடுப்போம் என்று எல்லோரும் கை த்தோம்” என்கிறார்கள். முதல் நாளிலேயே இந்த நூலகத்துக்கு 233 வாசகர்கள் வந்துள்ளார்கள்.
இப்போதெல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் மாணவ-மாணவிகள் யாரும் தொலைக்காட்சி பார்க்க உட்கார்வதில்லையாம். இந்த நூலகம்தான் அவர்களுக்கு அடைக்கலம் என்கிறார்கள். அறிவொளி பிரகாசிக்கிறது. எங்கும் இந்தத் தீப்பொறி பரவினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
- கா.சு. வேலாயுதன்,
தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in